Cyclone 'Dana' forms in the Bay of Bengal

Advertisment

வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், அது தொடர்ந்து புயலாக உருமாற வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருக்கும் நிலையில் அது மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து மேலும் வலுவடைந்து 22 ஆம் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக இருக்கிறது. அதன் பிறகு இன்னும் தீவிரமடைந்து 23ஆம் தேதி புயலாக வலுப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று திசை வேகத்தை வைத்து பார்க்கையில் இந்த புயலானது வடமேற்கு திசை நோக்கி நகரும் எனக்கணிக்கப்பட்டுள்ளது.

24ம் தேதி வடமேற்கு வங்கக் கடல் பகுதியை ஒட்டியஒடிசா மற்றும் மேற்குவங்கத்தை ஒட்டி நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு 'டாணா' என பெயர் வைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. கத்தார் நாடு கொடுத்த பரிந்துரையின் பேரில் இந்த புயலுக்கு 'டாணா' என பெயர் வைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் வங்கக்கடலில் உருவாகும் முதல் புயல் இது என்பது குறிப்பிடத்தகுந்தது.