
இந்த கரோனா நெருக்கடி காலத்தில் தமிழகத்தில் சைபர் குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அண்மையில் போலி கால்சென்டர் மூலம் கரோனா பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி வங்கிக் கடன் வாங்கி தருவதாக மோசடிகள் நடந்து. இது தொடர்பாக பல்வேறு புகார்கள் உருவாகி 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இப்படியான சைபர் குற்றங்கள் அதிகரித்திருக்கும் நிலையில் சென்னையில் சைபர் பிரிவுகள் நாளை முதல் தொடக்கம் எனச் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. சைபர் குற்றம் தொடர்பாக புகார் அளிக்கும் வசதியை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்துள்ளார்.
சைபர் குற்றங்கள் தொடர்பாக சென்னையில் 12 காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். சைபர் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க இது ஏதுவாக அமையும் எனச் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. சைபர் பிரிவுகளில் நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதுடன் நிபுணர்களின் ஆலோசனையும் அளிக்கப்படும். முக்கியமான, சிக்கலான புகார்களை இந்தப் பிரிவில் இருந்து மத்திய குற்றப்பிரிவின் சைபர் பிரிவுக்கு பரிந்துரை செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.