Advertisment

“தமிழக அரசு செயல்படாத அரசாக இருக்கிறது” - சி.வி.சண்முகம்  

CV Shanmuagam condemn on DMK Government

மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் கீழணையில் இருந்து விநாடிக்கு 2 லட்சம் கன அடி அளவிலான தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்டது. அதனால் சிதம்பரம் அருகே உள்ள பழைய கொள்ளிடம் ஆறு மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கு நடுவே உள்ள தீவு கிராமங்களான திட்டுக்காட்டூர், கீழ குண்டலபாடி, அக்கரை ஜெயங்கொண்டபட்டினம் ஆகிய 3 கிராமங்களை வெள்ள நீர் குடியிருப்புகளைச் சூழ்ந்தது. இதனால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், வெள்ளம் சூழ்ந்ததால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிமுக முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்.பி.யுமான சி.வி. சண்முகம் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Advertisment

அவருடன் சிதம்பரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கே.ஏ பாண்டியன், புவனகிரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன், அதிமுக அமைப்புச் செயலாளர் முருகுமாறன், முன்னாள் அமைச்சர் செல்விராஜெயம் மற்றும் நிர்வாகிகள் பலர் சென்றனர். திட்டுக்காட்டூர் கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சி.வி.சண்முகம் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அங்குள்ள பொதுமக்களுக்கு மதிய உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.

Advertisment

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி. சண்முகம், “கர்நாடக மாநிலத்தில் பெய்த மழையால் கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது. 2 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடும் அளவிற்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மழை இல்லை. ஆனால் மழை இல்லாமலேயே மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பொது மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகி, அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த அரசு செயல்படாத அரசாக இருக்கிறது. வெள்ள பாதிப்பு, பள்ளி மாணவி மரணம், அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் இப்படி எந்த விஷயத்திலும் தமிழக அரசு செயல்படாத அரசாக இருக்கிறது.

பெரிய அளவில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், அரசு நிர்வாகம் தூங்கி வழிகிறது. சிதம்பரம் பகுதியில் வெள்ளம் வடியவில்லை. புயல் பாதுகாப்பு மையத்தில் போதிய வசதி இல்லை. ஜெனரேட்டர் வசதி இல்லை. அதனால் அங்கு மக்கள் எப்படி தங்குவார்கள். இதைக்கூட செய்யாமல் மாவட்ட நிர்வாகம் இருக்கிறது.

திமுக அமைச்சர் பாலத்தின் கரையிலேயே வந்து கரையிலேயே பார்த்து விட்டு செல்கிறார். இதுபோன்ற வெள்ள பாதிப்பை தடுக்கத்தான் அதிமுக ஆட்சியில் ரூ 500 கோடி செலவில் ஆதனூர் - குமாரமங்கலம் இடையே தடுப்பணை கட்டப்பட்டது. அந்த பணி முடியும் தருவாயில் உள்ளது. அதன் பிறகு ஒரு தடுப்பணை கட்ட ஆய்வுக்காக நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் ஆட்சி மாறியதால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. ஆற்றின் கரைகளை பலப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அதை செய்யவில்லை. இப்போதாவது இந்த அரசு செயல்பட வேண்டும்” என்றார்.

admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe