திருவேற்காடு பகுதியில், கஞ்சா விற்பனை குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி மற்றும் அவரது தாய் மீது கஞ்சா கும்பல் அரிவாளால் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது. அவர்கள் இருவரையும் மீட்டு அப்பகுதி மக்களும் நாம் தமிழர் கட்சியின் ஆவடி தொகுதிப் பொறுப்பாளர்களும், திருவேற்காடு நகரப் பொறுப்பாளர்களும் இணைந்து சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துவருகின்றனர்.

Advertisment

attack

சென்னையை அடுத்த திருவேற்காடு, மேல்அயனம்பாக்கம் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் சுதாகர் (31), இவர், நாம் தமிழர் கட்சியின் திருவேற்காடு கிழக்கு பகுதி செயலாளராக உள்ளார். நேற்று 27-04-2019 இரவு 9 மணியளவில் வீட்டின் அருகில் நின்றுக்கொண்டிருந்த இவரை மர்ம நபர்கள் சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டினர். அதனால், இவரின் கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. அந்தக் கும்பலிடமிருந்து தப்பிக்க சுதாகர் முயன்றார். இந்தச் சமயத்தில், வீட்டிலிருந்து வெளியில் வந்த சுதாகரின் அம்மா ராணி, மகனை மர்ம கும்பலிடமிருந்து காப்பாற்ற முயன்றார். இதில் ராணிக்கு தலையில் வெட்டு விழுந்தது.

தாய், மகனை வெட்டிய கும்பலைப் பிடிக்க அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் முயன்றனர். இதனால், அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. வெட்டுக் காயமடைந்த சுதாகரையும் ராணியையும் மீட்ட பொதுமக்கள், அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேல் சிகிச்சைக்காக இருவரும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த திருவேற்காடு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். சுதாகரிடமும் ராணியிடமும் காவல்துறையினர் என்ன நடந்தது என்று விசாரித்து, அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்துள்ளனர்.

Advertisment

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ``மேல்அயனம்பாக்கம், ராஜீவ் காந்தி நகரைச் சுற்றியுள்ள குடியிருப்புகளின் அருகில் முட்புதர்கள் உள்ளன. இதனால், அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை படுஜோராக நடந்துவருகிறது. இதுகுறித்து சுதாகர், திருவேற்காடு காவல் நிலையத்தில் கஞ்சா கும்பல் குறித்த தகவல்களை ரகசியமாகத் தெரிவித்துவந்தார். அதன்பேரில், காவல்துறையினர் கஞ்சா கும்பலை கைதுசெய்தனர். இதனால் ஆத்திரமடைந்த கஞ்சா விற்கும் கும்பல்தான் சுதாகரைக் கொலை செய்ய கூலிப்படையை ஏவியுள்ளனர். நல்லவேளையாக அவர் உயிர் பிழைத்துக்கொண்டார்.

காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். ஆனால், கஞ்சா விற்பனை குறித்து தகவல் தெரிவித்த சுதாகர் குறித்து, எப்படி கஞ்சா விற்கும் கும்பலுக்கு தகவல் தெரிந்தது என்று தெரியவில்லை. காவல்துறையில் உள்ள கறுப்பு ஆடுகள் மூலம்தான் இந்தத் தகவல் கஞ்சா விற்கும் கும்பலுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. சுதாகர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், கஞ்சா விற்கும் கும்பல் குறித்து இனிமேல் யாரும் தகவல் தெரிவிக்கத் தயங்குவார்கள். மேலும், கஞ்சா விற்பனையால் எங்கள் பகுதியில் உள்ள சிறுவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கள் பகுதியில் கஞ்சா விற்பனையைத் தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கஞ்சா விற்கும் கும்பலின் பிடியிலிருந்து எங்கள் பகுதியை மீட்க வேண்டும்" என்றனர்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், ``சுதாகர், ராணி ஆகியோரை வெட்டியவர்கள் குறித்து விசாரித்துவருகிறோம். அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், அரிவாளால் வெட்டிய கும்பல் குறித்த தகவல் கிடைத்துள்ளது. ஏற்கெனவே கஞ்சா விற்ற சிலரைக் கைதுசெய்துள்ளோம். அவர்களின் பின்னணி குறித்தும் விசாரணை நடந்துவருகிறது. விரைவில் சுதாகர், ராணியை வெட்டியவர்களைக் கைதுசெய்துவிடுவோம்" என்றனர்.

Advertisment

கஞ்சா விற்பனைகுறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்த சுதாகர் மற்றும் அவரின் அம்மாவுக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம், திருவேற்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.