
கடந்த 2005ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ரமேஷ் தேவநாதன், ரமேஷ், பெருவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி ஆகிய மூவரும் சேர்ந்து பெருவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை, அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூட வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததாக கள்ளக்குறிச்சி போலீசார் அப்போது விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்தனர்.
இது சம்பந்தமாக மேற்படி மூவரையும் அந்தக் காலகட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் மூவரும் ஜாமீனில் வெளிவந்த நிலையில், இது சம்பந்தமான வழக்கு விழுப்புரம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த வழக்கில் ரமேஷ் தேவநாதன் மற்றும் இருவரையும் ஏற்கனவே பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இந்த வழக்கின் மூன்றாவது குற்றவாளியான வேலுச்சாமி ஜாமீனில் வெளியே வந்த பிறகு, நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளாகவே இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துவந்துள்ளதாக தெரிகிறது. அவரை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, கள்ளக்குறிச்சி உதவி ஆய்வாளர் ஆனந்தராஜ் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் வேல்சாமி ஆகியோர் தீவிரமாகத் தேடி அவரை கைது செய்தனர். இதையடுத்து, வேலுச்சாமியை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் 15 வருடங்கள் தலைமறைவாக இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.