
நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகிலுள்ள செங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் விஜய். கடந்த 2016ஆம் ஆண்டு கிராமத்தில் நடந்த திருவிழாவில் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். அது சமயம் அதே கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் அவரைக் கண்டித்திருக்கிறார். விவசாயியான ரவிச்சந்திரன் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர், பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர். கிராமத்தின் நாட்டாமையும் கூட. மேலும், கிராமம் மற்றும் மக்களின் வளர்ச்சி மீது கவனம் செலுத்துகிற முக்கியப் புள்ளியானவர்.
இதனால் கிராம மக்கள் அவர் மீது பற்றுதலாக இருந்துவந்தனர். தன்னை ரவிச்சந்திரன் கண்டித்ததால் ஆத்திரமடைந்த விஜய், தனது சகோதரர்களான வினோத், விகாஸ் உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து ரவிச்சந்திரனை அதே ஆண்டான 2016இல் வெட்டிக் கொன்றனர். இதனால் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரனின் உறவினர்கள், விஜய் வீட்டையும் அவர்களது உறவினர்கள் வீட்டையும் சூறையாடினர். கொலை தொடர்பாக வழக்குப் பதிவுசெய்த வீரவநல்லூர் போலீசார், விஜய், வினோத், விகாஸ் மற்றும் சிலரைக் கைதுசெய்து பாளை சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு. கிராமத்தைக் காலி செய்த விஜய் குடும்பத்தினர், அம்பை நகரை அடுத்த வாகைகுளத்திற்குக் குடிபெயர்ந்திருக்கிறார்கள். ஜாமீனில் வெளியே வந்த வினோத் உள்ளிட்ட மூவரும் தந்தையுடன் வசித்துவந்தனர். ரவுடியான விஜய் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 10 வழக்குகள் சேரன்மகாதேவி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி ஆகிய காவல் நிலையங்களில் பதிவாகியுள்ளன.
இதில் ஒரு வழக்கு காரணமாக கல்லிடைக்குறிச்சி போலீசார் விஜயைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த வழக்கில் ஜாமீனில் வந்த விஜய், அடிக்கடி தன் சொந்த கிராமமான செங்குளம் சென்று மக்களை மிரட்டியதோடு அவர்களோடு தகராறும் செய்திருக்கிறார். அதோடு ரவிச்சந்திரனின் குடும்பத்தினர் மீதும் அதிருப்தியாய் இருந்திருக்கிறார். மேலும், தங்கள் குடும்பம் ஊரைவிட்டு காலி செய்ய காரணமாக இருந்த ரவிச்சந்திரனின் மகன் சிவபிரவீனை (22) பழிக்குப் பழியாக தீர்த்துக்கட்ட முடிவு செய்திருந்தாராம். இந்நிலையில், சிவபிரவீனும் அவரது உறவினர் ஜெயமுருகனும் விவசாயத்திற்கான பூச்சி மருந்து வாங்க அருகிலுள்ள கல்லிடைக்குறிச்சிக்கு நேற்று (22.08.2021) மாலை பைக்கில் சென்றிருக்கின்றனர். இவர்களைக் கண்ட விஜய், விகாஸ் இருவரும் அவர்களை வெட்ட முயன்றனர். இதைக் கண்டு பதறிய சிவபிரவீனும் ஜெயமுருகனும் தங்களது கிராமத்திற்கு உடனே திரும்பியிருக்கிறார்கள். ஆனாலும் அவர்களைப் பைக்கில் விரட்டிச் சென்ற விஜய், விகாஸ் அவர்களை வெட்ட முயன்றிருக்கிறார்கள். அந்த நேரத்தில் சிவபிரவீன் கிராமத்திற்குள்ளே சென்றிருக்கிறார். கிராமத்தினுள்ளேயே புகுந்து சிவபிரவீன், ஜெயமுருகன் இருவரையும் வெட்ட வந்ததைக் கண்டு ஆத்திரமடைந்த பொது மக்கள், விஜய் மற்றும் விகாஸ் இருவரையும் சரமாரியாகக் கற்களால் தாக்கியிருக்கிறார்கள். இதில் விஜய் தலையின் மீது கல் பட்டு கடுமையான காயத்தை ஏற்படுத்தியதால் சம்பவ இடத்திலேயே அவர் இறந்திருக்கிறார்; விகாஸ் படுகாயமடைந்திருக்கிறார்.
இதையறிந்து ஸ்பாட்டிற்கு வந்த நெல்லை ஏ.டி.எஸ்.பி. சுப்பாராஜ், சேரன்மகாதேவி டி.எஸ்.பி. பார்த்திபன், இன்ஸ்பெக்டர் சுதா தேவி உள்ளிட்ட போலீசார், விஜய் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். படுகாயமடைந்த விகாஸை அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த போலீசார், சிவபிரவீன், ஜெயமுருகன் மற்றும் அங்குள்ளோரிடம் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.
ஆவேசம் மற்றும் ஆத்திரம் காரணமாக பொது மக்களே ரவுடியைக் கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியைப் பரபரப்பாக்கியிருக்கிறது.