
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் வீட்டில் கடந்த அக்டோபர் மாதம் 17ஆம் தேதி 47 சவரன் தங்க நகை மற்றும் 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக கோபாலகிருஷ்ணன் அளித்த புகாரில் வாடிப்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்று வந்தது. அதில் திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான கணேசன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ள வழக்கில் கைதாகி சிறைச் சென்று தற்போது ஜாமீனில் வெளிவந்து திருச்சி சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறையில் கணேசன் வசித்துவருகிறார். அதனை அறிந்த தனிப்படை போலீசார், அங்கு விரைந்து சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கோபாலகிருஷ்ணன் வீட்டில் கைவரிசை காட்டியது கணேசன் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கணேசனை மீண்டும் கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 42 சவரன் தங்க நகைகளை மீட்டனர். மீதி நகைகள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.