cuddalore virudhachalam women incident police arrested two

Advertisment

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மோசட்டை கிராமத்தை சேர்ந்தவர் சாந்தி. இவரது கணவர் செல்வராஜ் இறந்த பின்பு, தனது ஒரே மகளான சத்யாவை பெரியாத்துகுறிச்சியை சேர்ந்த பாண்டியன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஏழு மாதங்களாக விருத்தாசலம் ஆலடி ரோட்டில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி வாடகை வீட்டில் தனியாக வசித்துவந்த சாந்தி, மர்மமான முறையில் கழுத்து அறுக்கப்பட்டும், வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்தியும், ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக விருத்தாசலம் காவல்துறைக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன் தீவிர விசாரணை மேற்கொண்டுவந்தனர். மேலும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவ் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர்கள் விஜயரங்கன், கிருபாலட்சுமி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

Advertisment

இந்நிலையில் சாந்தியின் செல்ஃபோன் நம்பருக்கு வந்த அழைப்புகள், சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்ட தனிப்படையினர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சீலநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி (எ) செல்லதுரை மற்றும் அவரது மனைவியின் தம்பியான பாலசுப்பிரமணியனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் வேலுச்சாமி என்ற செல்லதுரை சேத்தியாத்தோப்பு பகுதியில், இருபது வருடங்களுக்கு மேலாக தனியாக தங்கியிருந்து, கருப்புசாமி கோயிலில் கிளி ஜோசியம் பார்த்து வந்த நிலையில் கோவிலுக்கு அடிக்கடி வரும் சாந்தியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணவனை இழந்த சாந்தியுடன், வேலுச்சாமி பலமுறை தனியாக இருந்துள்ளார். கடந்த 11-ஆம் தேதி சாந்தி வீட்டிற்கு வந்த வேலுசாமி மற்றும் அவரது உறவினரான பாலசுப்பிரமணியன் இருவரும் இரவு முழுக்க அவரது வீட்டில் இருந்துள்ளனர். அப்போது அதிகாலையில் சாந்திக்கும், வேலுச்சாமிக்கும் இடையே பணத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வேலுச்சாமி, தான் வைத்திருந்த கத்தியால் உறவினரான பாலசுப்பிரமணியன் துணையுடன் கழுத்தை அறுத்தும், வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்தியும் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். பின்னர் காவல்துறையினர் அவர்களை கைதுசெய்து, வழக்குப் பதிந்து சிறையில் அடைத்தனர்.