/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_110.jpg)
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள காடாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமுருகன்(40).கடந்த அக்டோபர் மாதம்,இவர் மீது திருட்டு வழக்குபதிவு செய்யப்பட்டு, விருத்தாசலம் கிளைச் சிறையில் கடந்த 30.10.2020 அன்று அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த 04-ஆம் தேதி அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் அதனால் அவரை மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் இறந்துவிட்டதாகவும் காவல்துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, மனித நேய மக்கள் கட்சி சார்பாக அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில், ‘கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே காடாம்புலியூரில் வசித்து வந்த செல்வமுருகன் என்பவர் தனது வியாபாரம் சம்பந்தமாக அக்டோபர் 28 அன்று வடலூர் சென்றுள்ளார்.
வியாபாரத்திற்குச் சென்ற செல்வமுருகன் பல மணி நேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தால் அவரது மனைவி வடலூருக்கு வந்து தேடிப்பார்த்துவிட்டு, நெய்வேலி காவல் நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளார்.
மறுதினம் காவலர்கள் செல்வமுருகனின் மனைவியைத் தொடர்பு கொண்டு, இந்திரா நகர் பகுதிக்கு அழைத்து “உன் கணவர் செல்வமுருகன் மீது திருட்டு வழக்குப் போடப் போகிறோம்; 10 பவுன் செயின் கொடுத்துவிட்டால், வழக்குப் பதியாமல் விட்டு விடுகின்றோம்” என்று மிரட்டி, அவரை வீட்டுக்கு அனுப்பி உள்ளனர். அக்டோபர் 30 அன்று நெய்வேலி காவல்நிலையத்தில் செல்வ முருகனைப் பார்க்கச் சென்ற அவரது மனைவியிடம் முருகன், 'காவல்துறையினர் தன்னை அடித்துச் சித்திரவதை செய்வதாக'க் கதறி அழுதுள்ளார்.
இந்நிலையில், நவம்பர் 4 அன்று இரவு செல்வமுருகன் விருத்தாசலம் மருத்துவமனையில் இருப்பதாகக் கூறி, அங்கே சென்று அவரைப் பார்க்குமாறு காவல்துறையிலிருந்து செல்வமுருகன் மனைவி பிரேமாவிற்கு தொலைப்பேசியில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, பிரேமா அங்கே சென்றபோது, செல்வமுருகன் இறந்து விட்டதாக மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01 (1)_0.png)
விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட செல்வமுருகன், காவலர்கள் தன்னை அடித்துச் சித்திரவதை செய்வதாக தெரிவித்திருந்த நிலையில், அவர் மரணமடைந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
காவல்நிலையத்தில் நடைபெற்ற இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டிவிசாரணையை மேற்கொள்ளவும், கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)