
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த மே.மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு தனது மனைவி சுமதி, மகள் புவனேஸ்வரி, மகன்கள் சக்தி, ஹரிஷ் ஆகியோருடன் குடும்பத்துடன் வசித்து வந்தனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் வெங்கடேசன் தனது குடும்பத்துடன் மே.மாத்தூர் கிராமத்தில் உள்ள தங்களது வீட்டிற்கு வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று வெங்கடேசன், அவரது மனைவி சுமதி ஆகியோர் வெளியே சென்றுள்ளனர். பாட்டி முருவாயி பேரக் குழந்தைகள் சக்தி(10), ஹரிஷ் (8) ஆகியோரை பார்த்துக் கொண்டிருந்தார். ஹரிஷ் வெளியே விளையாடச் சென்ற நிலையில் சிறுவன் சக்தி வீட்டினுள் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தான். பாட்டி முருவாயி வீட்டிற்கு வெளியே குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்த சக்தி எதிர்பாராத விதமாக சேலை சுற்றி இறுக்கி மூச்சுத்திணறிக் கிடந்துள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவனின் பாட்டி முருவாயி அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகக் கூறினர். இதையடுத்து விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெங்கடேசன் குடும்பத்தினர் இன்று மீண்டும் பெங்களூருக்குச் செல்ல இருந்த நிலையில், நேற்று சிறுவன் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.