Skip to main content

போராட்டத்திற்கு தயாரான பூசாரிகள்; எச்சரிக்கை விடுத்த போலீசார் 

Published on 21/03/2023 | Edited on 21/03/2023

 

cuddalore temple priest issue involved police dsp

 

தமிழகம் முழுவதும் உள்ள கிராம கோவில் பூசாரிகளுக்கு மாத உதவித்தொகை 10,000 வழங்க வேண்டும்; முடங்கிக் கிடக்கும் கிராம கோவில் பூசாரிகள் நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும்; அனைத்து கிராம கோவில்களுக்கும் கட்டணம் இல்லாத மின்சாரம் வழங்க வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் நேற்று கிராம கோவில் பூசாரிகள் சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.

 

அதன்படி கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவதற்கு மாவட்டம் முழுவதும் இருந்து கிராம கோயில் பூசாரிகள் திரண்டு வந்து ஏற்பாடுகளில் ஈடுபட்டனர். இவர்களில் கிராம கோவில் பூசாரிகள், அருள்வாக்கு கூறுபவர்கள், பூக்கடை நடத்துகிறவர்கள் என ஏராளமானோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ள திரண்டு வந்திருந்தனர். திடீரென பூசாரிகள் கூடியிருந்த இடத்திற்கு வருகை தந்த கடலூர் டிஎஸ்பி கரிகால் பாரி சங்கர் தலைமையில், போலீசார் பூசாரிகளிடம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி இல்லை. அனைவரும் கலைந்து செல்ல வேண்டும். மீறிப் போராட்டம் நடத்த முனைந்தால் அனைவரையும் கைது செய்வோம் என்று எச்சரிக்கை செய்ததோடு பூசாரிகளை கைது செய்து கொண்டு செல்வதற்காக வாகனங்களையும் கொண்டு வந்து நிறுத்தினர். இதற்காக ஏராளமான போலீசாரையும் கொண்டு வந்து குவித்தனர்.

 

போலீசாரின் எச்சரிக்கையையும், முன்னேற்பாடுகளையும் பார்த்த பூசாரிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ஒருவருக்கொருவர் கலந்து பேசி பிறகு போராட்டத்தை கைவிட முடிவெடுத்தனர். அதோடு தங்களது கோரிக்கை மனுக்களை தமிழக முதல்வரின் கவனத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன்படி அங்கு வந்திருந்த பூசாரிகள் அனைவரிடமும் கோரிக்கை மனுக்களை பெற்ற நிர்வாகிகள் அந்த மனுக்கள் அனைத்தும் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க அனுமதி பெற்றனர். அதன்படி பூசாரிகள் பேரவைத் தலைவர் பழனிவேலு, இணை அமைப்பாளர் பன்னீர், ஒன்றிய அமைப்பாளர்கள் மாயகிருஷ்ணன், மகாலிங்கம், பாண்டியன், திலீப் பக்கிரிசாமி ஆகியோர் கூட்டாகச் சென்று மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் அவர்களை சந்தித்து தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து மாவட்ட ஆட்சியர் மூலம் முதல்வருக்கு தங்களுக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பி கோரிக்கையை நிறைவேற்ற பரிந்துரை செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம் பூசாரிகள் பேரவை நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்.

 

அதன்படி அனைத்து மனுக்களையும் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். போராட்டம் நடத்த சுமார் 500க்கும் மேற்பட்ட கோவில் பூசாரிகள் கடலூருக்கு திரண்டு வந்திருந்தனர். ஆனால் போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்திற்குத் தடை விதித்த சம்பவம் பூசாரிகள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. இச்சம்பவம் கடலூர் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோடை வெப்பம்; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Tamil Nadu Chief Minister M. K. Stalin's instructions for summer heat

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்க்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, “வெப்ப நிலை அதிகரிக்கும். வெப்ப அலை வீசும், என்பது போன்ற செய்திகள் தினந்தோறும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இதனை உணர்த்தும் வகையில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் கவனத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பொதுவாக கோடை காலம் என்பது வெப்பம் அதிகம் உள்ள மாதங்களாக இருந்தாலும், நாளுக்கு நாள் வெப்ப அளவு அதிகமாகி வருகிறது. இதில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அதனால்தான் நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் அரசுத் துறை அதிகாரிகளுடன் இது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினேன். இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மருத்துவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் ஆலோசனையை அரசு அதிகாரிகள் கேட்டுத் தெரிந்து கொண்டதன் அடிப்படையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அறிக்கையை வெளியிடுவது மிக மிக அவசியமானதாகக் கருதுகிறேன். வெப்பநிலை அதிகமாகும் காலங்களில் குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள், வயதானவர்கள். கர்ப்பிணிப் பெண்கள், உடல்நலக் குறைபாடுகள் உடையவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படலாம். இவர்களை மிகக் கவனமாக பாதுக்காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும்போது. உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு, மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். பணிநேரங்களில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் இல்லை என்றாலும், போதிய அளவு நீரை தொடர்ந்து பருகவேண்டும். அதிக அளவில் மோர், அரிசிக்கஞ்சி, இளநீர், எலுமிச்சைப் பழச்சாறு போன்றவற்றை பருகவேண்டும். உணவுப் பழக்க வழக்கங்களில் மாறுதல்களைச் செய்து கொள்ள வேண்டும். நீர்ச்சத்து காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். பழச்சாறுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

பயணத்தின்போது துணி, துண்டு, தொப்பி குடிநீர் எடுத்துச் அணிந்து செல்லவேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான. தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. வயது முதிர்ந்தவர்கள் நடந்து செல்லும் போது களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். வெப்பம் அதிகமாக உள்ள திறந்த வெளியில் வேலை செய்யும்போது, களைப்பு, தலைவலி, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், உடனடியாக நிழலுக்குச்செல்லவேண்டும். மேலும், தண்ணீர், எலுமிச்சைப் பழச்சாறு, ஓ.ஆர்.எஸ். பருக வேண்டும். மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்கவும். மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியை நாடவேண்டும். சிறுபிரச்சனை என்றாலும் அதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அனைத்து பொதுமக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

அதிகரித்துவரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மூலமாகவும், அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலமாகவும், பொதுமக்கள். திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்டதூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் மக்கள் பாதுகாப்பில் முழு அக்கறை செலுத்தி பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்