/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hand-in_12.jpg)
கடலூர் அருகிலுள்ள சாவடி காமாட்சி நகரை சேர்ந்தவர் தாமஸ் மரிய ஜுலியன் இவர் பண்ருட்டி அருகில் உள்ள தெற்கு மாம்பட்டு அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கலைச்செல்வி. இவர் கடலூர் முதுநகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் இரண்டு பேரும் கடன் வாங்கி பெரிய அளவில் வீடு கட்டுகின்றனர்.
இதனால் கடன் தொகை அதற்கான வட்டி ஆகியவை அதிகரித்துக்கொண்டே இருந்துள்ளது. வாங்கிய கடனையும் வட்டியையும் கட்டுவதற்கு மிகவும் சிரமப்பட்டு கொண்டிருந்தனர். இதனால் கணவன் மனைவி இருவருக்குள்ளும் அடிக்கடி பிரச்சனை சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கணவருடன் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டு மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள அவரது அண்ணன் வீட்டிற்கு கலைச்செல்வி சென்றுவிடுவது உண்டு. பிறகு கணவர் ஜூலியன் அங்கு சென்று உறவினர்களிடம் கூறி அவர்கள் மூலம் கலைச்செல்வி சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்து வருவது உண்டு. இருப்பினும் கடன் பிரச்சனையால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார் கலைச்செல்வி.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த புது நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் எழில்தாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கலைச்செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கலைச்செல்வியின் சகோதரர் அருளானந்தம் கடலூர் புது நகர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் மனைவி இருவருமே ஆசிரியர்களாக இருந்து போதிய அளவு வருமானம் இருந்தும் அந்த வருமானத்தைக் கொண்டு நல்ல நிலையிலேயே வாழ்ந்திருக்கலாம் கடன் வாங்கி வீடுகட்டி அந்த கடனை அடைக்க முடியாததால் குடும்பத்தின் பிரச்சனை ஏற்பட்டு ஆசிரியையாக பணி செய்து வந்த கலைச்செல்வி தற்கொலை செய்து கொண்டதால் அவரது பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. பொதுவாக அரசு ஊழியர்களாக இருக்கும் கணவன் மனைவி ஆகியோர் இருப்பதைக் கொண்டு நிறைவுடன் வாழ்வதைப் பழகிக்கொள்ள வேண்டும். மேலும் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கடன்பட்டு உடன்பட்டு குடும்பத்தில் பிரச்சனைகளையும் சிக்கல்களையும் ஏற்படுத்திக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வது அனைவருக்கும் சிறப்பு என்கிறார்கள் அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள். கலைச்செல்வியின் மரணம் அப்பகுதி மக்கள் அவரது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)