
கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக முழு ஊரடங்கு கடைப்பிடிப்பதை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் தடுப்பு அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், கடலூர் லாரன்ஸ் சாலையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் வாகன சோதனை செய்துகொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த காரில், ஐந்து பேர் வந்தனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை செய்ததில், உடல்நிலை சரியில்லாததால் புதுச்சேரியில் உள்ள தவளக்குப்பம் அரவிந்தர் மருத்துவமனைக்குச் செல்வதாக கூறினர். ஆனால், அந்தத் தம்பதியில் பெண் பட்டுப்புடவை, நகைகள் அணிந்து மேலே போர்வை போர்த்திக்கொண்டு உடல்நிலை சரியில்லாதது போல் நாடகம் ஆடியதை அறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ், ஆம்புலன்ஸை வரவழைத்து அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வாகனத்தைப் பறிமுதல் செய்தார்.
திருமணத்திற்குச் சென்ற தம்பதியினர் மருத்துவமனை செல்வதாக நாடகமாடி காவல்துறையினரை ஏமாற்ற நினைத்து, சிக்கலில் சிக்கிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.