கடலூர் ரவுடி கொலை..! கொலையாளி என்கவுண்டர்!!

cuddalore rowdy encounter

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சுப்புராயலு நகரைச்சேர்ந்த கனகராஜ் என்பவரது மகன் வீரா என்கிற வீராங்கையன் (வயது 30). ரவுடியான இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. வீரா கடலூர் உழவர் சந்தை அருகில் பழக்கடை வைத்து நடத்தி வந்தார்.இந்த நிலையில் நேற்று (16.02.2021) இரவு வியாபாரம் முடிந்ததும், வீரா கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டார்.

வீட்டின் அருகே சென்றபோது, அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வீராவை சரமாரியாக வெட்டியதுடன், தலையையும் துண்டித்தனர். பின்னர் அவரது உடலை அங்கேயே போட்டுவிட்டு, தலையுடன் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களில் ஏறி அங்கிருந்து தப்பி சென்றனர்.

cuddalore rowdy encounter

இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் மற்றும் பெற்றோர், உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.இதுபற்றி தகவல் அறிந்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ், துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி, இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப் - இன்ஸ்பெக்டர் எழில்தாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொல்லப்பட்ட வீராவின் உடலைப் பார்வையிட்டு விசாரணை செய்தனர். பின்னர் வீராவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே இன்று காலை கடலூரில் ரவுடியை வெட்டிக் கொன்று தலையைத் துண்டித்த சம்பவத்தில் தொடர்புடைய கிருஷ்ணன் என்பவர் பண்ருட்டி அருகே என்கவுண்டர் செய்யப்பட்டார்.கடலூர் ரவுடி வீராவை கொலை செய்த கொலையாளிகளைத் தேடி காவல்துறை சென்றபோது பண்ருட்டி அருகே உள்ள குடுமியான்குப்பம் மலட்டாறு பகுதியில் கிருஷ்ணனை காவல் துறையினர் கைது செய்ய முயன்றனர்.அப்போது கிருஷ்ணன்போலீசாரைத் தாக்கிவிட்டு தப்ப முயன்றதால்சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணன் தாக்கியதில் போலீஸ் எஸ்.ஐ. ஒருவருக்குக் காயம் ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

ரவுடி வீரா முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா?பழிக்குப் பழி வாங்குவதற்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.பிரபல ரவுடியைத் தலை துண்டித்துக் கொலை செய்த அன்று இரவே கொலையாளி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Cuddalore encounter
இதையும் படியுங்கள்
Subscribe