Skip to main content

கடலூர் ரவுடி கொலை..! கொலையாளி என்கவுண்டர்!!

Published on 17/02/2021 | Edited on 17/02/2021

 

cuddalore rowdy encounter

 

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சுப்புராயலு நகரைச் சேர்ந்த கனகராஜ் என்பவரது மகன் வீரா என்கிற வீராங்கையன் (வயது 30). ரவுடியான இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. வீரா கடலூர் உழவர் சந்தை அருகில் பழக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று (16.02.2021) இரவு வியாபாரம் முடிந்ததும், வீரா கடையைப் பூட்டிவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டார்.

 

வீட்டின் அருகே சென்றபோது, அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வீராவை சரமாரியாக வெட்டியதுடன், தலையையும் துண்டித்தனர். பின்னர் அவரது உடலை அங்கேயே போட்டுவிட்டு, தலையுடன் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களில் ஏறி அங்கிருந்து தப்பி சென்றனர். 

 

cuddalore rowdy encounter

 

இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் மற்றும் பெற்றோர், உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ், துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி, இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப் - இன்ஸ்பெக்டர் எழில்தாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொல்லப்பட்ட வீராவின் உடலைப் பார்வையிட்டு விசாரணை செய்தனர். பின்னர் வீராவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

இதனிடையே இன்று காலை கடலூரில் ரவுடியை வெட்டிக் கொன்று தலையைத் துண்டித்த சம்பவத்தில் தொடர்புடைய கிருஷ்ணன் என்பவர் பண்ருட்டி அருகே என்கவுண்டர் செய்யப்பட்டார். கடலூர் ரவுடி வீராவை கொலை செய்த கொலையாளிகளைத் தேடி காவல்துறை சென்றபோது பண்ருட்டி அருகே உள்ள குடுமியான்குப்பம் மலட்டாறு பகுதியில் கிருஷ்ணனை காவல் துறையினர் கைது செய்ய முயன்றனர். அப்போது கிருஷ்ணன் போலீசாரைத் தாக்கிவிட்டு தப்ப முயன்றதால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணன் தாக்கியதில் போலீஸ் எஸ்.ஐ. ஒருவருக்குக் காயம் ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. 

 

ரவுடி வீரா முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? பழிக்குப் பழி வாங்குவதற்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது. பிரபல ரவுடியைத் தலை துண்டித்துக் கொலை செய்த அன்று இரவே கொலையாளி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.