
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மாளிகைமேடு கிராமம் புதுக்காலனி இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார். விவசாயியான இவரது மகன் ஆதித்யா (11), அங்குள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். சிவக்குமாரின் தங்கை மகள் பாரதி (6). இவர்கள் இருவரும் நேற்று மதியம் மேல்கவரப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட எஸ்.கே.பாளையம் கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த அத்தை சுமதிக்கு சாப்பாடு எடுத்துச் சென்றனர்.
சாப்பாடு கொடுத்த பின் இருவரும் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளை அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். செங்கல் சூளை அருகில் சூளைக்காக மண் எடுத்த ஒரு பள்ளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக சுமார் 4 அடி அளவிற்கு ஆழத்திற்குத் தண்ணீர் தேங்கி நின்றது.
இந்நிலையில் ஆதித்யா, பாரதி இருவரும் அந்தப் பள்ளத்தில் இறங்கி குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளனர். இதனிடையே இருவரையும் காணாததால் அத்தை சுமதி அலறியபடியே அங்குமிங்கும் தேடினார். பின்னர் அங்கிருந்தவர்கள் உறுதியுடன் சூளை பள்ளத்தில் தேங்கிய தண்ணீரில் இறங்கிதேடியபோது சிறுவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டனர்.
இதுபற்றி தகவலறிந்த பண்ருட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பண்ருட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்சூளை பள்ளத்தில் சிறுவன், சிறுமி மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)