Cuddalore mayor sundari raja apologized to DMK councillor

கடலூர் மாநகராட்சியில் மாமன்ற கூட்டம் மேயர் சுந்தரி ராஜா தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் தாமரைச்செல்வம், ஆணையர் காந்திராஜ் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்து இல்லாமல் தொடங்கியதால்மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்து தீண்டாமை உறுதிமொழி எடுத்து முறைப்படி துவங்கியது.

Advertisment

அப்போது திமுக கவுன்சிலர் சசிகலா, விசிக கவுன்சிலர் சரிதா எழுந்து அவர்களின் வார்டுகளில் உள்ள சாலைகளில் கழிவுநீர் வழிந்து ஓடுகிறது என்றும் இதுகுறித்து தொலைப்பேசியில் ஆணையரை தகவல் கொண்டால் தொலைப்பேசியை எடுக்க மறுக்கிறார் என்றும் பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது மேயர், கவுன்சிலர்கள் தொலைப்பேசியை எடுத்துப் பேச வேண்டும் கோரிக்கைகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்றார்.

Advertisment

அப்போது திமுக கவுன்சிலர்கள் தமிழரசன், பிரகாஷ், ஃபாருக் அலி, மகேஸ்வரி, கீர்த்தனா, சுமதி, சாரத் ஆகிய 8 திமுக கவுன்சிலர்கள் அவர்களின் வார்டுகளில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என்றும் ஏன் எங்களுக்கு மட்டும் பாகுபாடு எந்த ஒரு பணியும் செய்து கொடுக்க மறுக்கிறீர்கள். குறிப்பாகப் பத்து வார்டுகளின் உறுப்பினர்கள் உங்களுக்கு எதிராக வாக்களித்தார்கள் என்ற நோக்கில் பணிகள் செய்து தர மறுக்கிறீர்களா?நாங்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நீங்கள் விருப்பப்பட்டால் ராஜினாமா செய்கிறோம் என மேயரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நிதி நிலைமை இல்லை சரியானவுடன் செய்து கொடுக்கிறோம் என மேயர் பதிலளித்தார்.

இதற்கு எதிராக சில திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து உங்கள் இருக்கைக்கு சென்று பேசுங்கள் எனக் கூறினார்கள்.இதனால் இரு தரப்பு கவுன்சிலர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மேயருக்கு ஆதரவான திமுக கவுன்சிலர் விஜயலட்சுமி செந்தில் என்பவர் கையில் பன்றி படத்தை வைத்துக் கொண்டு 44 ஆவது வார்டு கவுன்சிலர் கீர்த்தனாவை பன்னி மேய்க்கிற நீ எல்லாம் கேள்வி கேக்குறியா? எனச் சாதிப்பெயர் சொல்லி கேட்டார் என மாமன்றத்தில் கவுன்சிலர் கீர்த்தனா கூச்சலில் ஈடுபட்டார். இவருக்கு ஆதரவாக ஏற்கனவே முற்றுகையில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர்கள்விஜயலட்சுமி மன்னிப்பு கேட்க வேண்டும் என உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்‌.

Advertisment

கவுன்சிலர் விஜயலட்சுமி மாமன்றக் கூட்டத்தில் சக திமுக கவுன்சிலரை சாதி ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் கேவலப்படுத்துவதை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேயர் மற்றும் ஆணையரிடம் 10 திமுக கவுன்சிலர்கள் ஒன்று சேர்ந்து முறையிட்டனர். அப்போது பேசிய மேயர், சாதி ரீதியாக பேசிய மாமன்ற உறுப்பினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.ஆனால் கவுன்சிலர் விஜயலட்சுமி ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.இதனால் மாமன்ற கூட்டத்தில் மீண்டும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, இந்த சம்பவத்திற்கு மேயர் சுந்தரி ராஜா வருத்தம் தெரிவித்தார். பின்னர் கூட்டத்தை முடித்தார்.இதற்கு சமாதானமாகாத கீர்த்தனா உள்ளிட்ட 8 திமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து மன்றக் கூட்டத்தின் உள்ளே போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை மாநகராட்சி ஆணையர் காந்திராஜ் துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த பிரச்சனை தற்காலிகமாக சரியாகியது.

இதுகுறித்து மாநகராட்சியில் உள்ளவர்கள் கூறுகையில், கடந்த மேயர் தேர்தலின் போது 10 திமுக கவுன்சிலர்கள் மேயர் சுந்தரி ராஜாவுக்கு எதிராக வாக்களித்தனர். அதனையொட்டி இவர்கள் வார்டுகளில் உள்ள குறைகளைத்தீர்ப்பதில் சுனக்கம் ஏற்பட்டு வருவதாகவும்,இதனால் மாமன்றக் கூட்டம் நடைபெறும் போது இந்த பிரச்சினை எழுகிறது. தற்போது ஒருபடி மேலே போய் சாதி மற்றும் தொழில் ரீதியாககேவலப்படுத்தி அடக்குமுறை நடக்கிறது. இதற்குத்தமிழக முதல்வர் தலையிட்டு நிரந்தர நடவடிக்கையை மேற்கொண்டால் மட்டுமே இது சரியாகும் என்கின்றனர்.