Skip to main content

கிராமத்திற்கு 5 மூடப்படாத ஆழ்குழாய் கிணறுகள்! அலட்சியத்தில் கடலூர் உள்ளாட்சி நிர்வாகங்கள்!

Published on 28/10/2019 | Edited on 28/10/2019

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபட்டியில் ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை  சுர்ஜித் நான்கு நாட்களாக உயிருக்கு போராடி வரும் நிலையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பயன்படுத்தப்படாமல் உள்ள ஆழ்குழாய் கிணறுகளை உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும் என்று கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்புச்செல்வன் எச்சரிக்கையும், வேண்டுகோளும் விடுத்திருந்தார். ஆனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் குறிப்பாக கிராமப்புறங்களில் பயன்படுத்தப்படாமல் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் இன்னும் முறையாக, முழுமையாக மூடப்படாமல் உள்ளன. 

 

cuddalore kids closed unused borewells

 

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள பெருமுளை கிராமத்தில் 30-க்கும் மேற்ப்பட்ட ஆழ்துளை கிணறுகள் போடப்பட்டன. அதில் கடந்த 2 ஆண்டுகளாகவே 20-க்கும் மேற்ப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள்  பழுதடைந்துள்ளன.  இதில் சாலையோரம் உள்ள 5-க்கும் மேற்ப்பட்ட ஆழ்குழாய்க் கிணறுகளில்  உள்ள அடி பம்புகள் மற்றும் மோட்டார்களை கழட்டிவிட்டதால் திறந்தவெளியில் திறந்த நிலையில் உள்ளன.  அவைகள் அனைத்தும்  சாலை ஓரம் உள்ளதாலும், பேருந்து நிறுத்தம் அருகிலும் உள்ளதாலும், கிராமத்தில் உள்ள குழந்தைகள் பள்ளி செல்ல பேருந்துகளில் ஏருவதற்காக  அங்கு நிற்பதாலும், குழந்தைகள் அப்பகுதியில் பெரும் அளவில் விளையாடுவதாலும் இந்த பழுதடைந்த திறந்தவெளியில்  உள்ள ஆழ்குழாய் கிணறுகள் ஆபத்தை தருவனவாக உள்ளன. 

பயனற்று கிடக்கும் ஆழ்குழாய் கிணறுகளை உடனடியாக  பழுது பார்த்து பயன்பாட்டிற்கு விட வேண்டும். அதுவரை குழாய்களை முடி வைக்க வேண்டும் என்கின்றனர் கிராம மக்கள். 

திறந்த நிலையில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளை உடனடியாக மூடுமாறு கடலூர் மாவட்ட நிர்வாகம் இரண்டு நாட்களுக்கு முன்பே அறிவித்திருந்தும், இந்த கிராமத்தில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் ஆபத்தை விளைவிக்கும் வகையில் திறந்த நிலையிலேயே உள்ளன. இதனால்  பெருமுளையில் உள்ள மாணவர்கள்,  குழந்தைகள் குழுவாக சென்று சாக்கு பைகளால் சில ஆழ்குழாய் கிணறுகளை மூடினார்கள். 

இந்த நிலை இக்கிராமத்தில் மட்டுமல்ல.  இதுபோல் அருகில் உள்ள சிறுமுளை, புதுகுளம், குமாரை, நெடுங்குளம், புலிவலம் உள்ளிட்ட  கிராமங்களிலும் கிராமத்திற்கு 5, 6  என  50 க்கும் மேற்பட்ட  பழுதடைந்த ஆழ்குழாய் கிணறுகள் ஆபத்தை விளைவிக்கும் வகையில் திறந்த நிலையிலேயே உள்ளன. இதேபோல் பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமம் அருகிலுள்ள கீழ் அருங்குணம் கிராமத்திலும் பொது பயன்பாட்டுக்காக போடப்பட்ட ஆழ்குழாய் கிணறு பழுதடைந்த நிலையில் மூடப்படாமல் ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளதாக கிராமத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். திட்டக்குடி பேரூராட்சியில் எம்ஜிஆர் சிலை பின்புறம் ஒரு ஆழ்குழாய் கிணறு பல மாதங்களாக மூடப்படாமல் இருந்த நிலையில் தற்போது ஒப்புக்காக சாக்குப்பையில் கட்டி மூடி  வைத்துள்ளனர்.  

எனவே இனியும் அலட்சியம் காட்டாமல்  உடனடியாக தமிழக ஊள்ளாட்சிதுறை தமிழகம் முழுவதும் உள்ள கிராமபுறங்களிலும், நகர்புறங்களிலும் கை பம்புகளுக்காகவும், குடிநீர் தொட்டிகளில் நீரேற்றவும் போட்டு பயன்பாட்டில் இல்லாமல் பழுதடைந்த ஆழ்துளை கினறுகளை உடனடியாக  சீரமைக்க வேண்டும் என்றும், இல்லையெனில் முழுமையாக அகற்ற வேண்டும் எனவும் மாணவர்கள்,  குழந்தைகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


 

சார்ந்த செய்திகள்