
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த புத்துக்கூரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி என்பவரது மகள் கண்ணகி. இவருக்கும் பக்கத்து ஊரான குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிக்கண்ணு மகன் முருகேசனுக்கும் காதல் ஏற்பட்டு, 2003-ஆம் ஆண்டு மே மாதம் இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.
கண்ணகியை சின்னசேலம் அருகில் மூங்கில்பட்டிலுள்ள உறவினர் வீட்டில் விட்டு, முருகேசன் வண்ணாங்குடிகாட்டில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். கண்ணகியைக் காணாமல் தேடிய அவரது தந்தை துரைசாமி, அண்ணன் மருதுபாண்டியன் மற்றும் உறவினர்கள் முருகேசன், கண்ணகி தம்பதியைப் புதுக்கூரைப்பேட்டைக்கு கொண்டு வந்தனர். 2003 ஜூலை 8-ம் தேதி அந்த ஊர் மயானத்தில் கண்ணகி, முருகேசன் இருவரும் காது மற்றும் மூக்கில் விஷம் ஊற்றப்பட்டுக் கொல்லப்பட்டனர். பின்னர் இருவர் உடலையும் அடையாளம் தெரியாமல் போகட்டும் என்று தீ வைத்து எரித்தனர். சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிகள் கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கி எடுத்தது.
இது குறித்து முருகேசன் உறவினர்கள் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் செய்தும் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து, சப்- இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் வழக்குப் பதிவு செய்ய மறுத்தனர். மேலும் முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு உள்ளிட்டோர் மீதே பொய் வழக்கு பதிவு செய்தனர்.

அதையடுத்து இதுகுறித்து பல்வேறு போராட்டங்களுக்குப் பின் கண்ணகி, முருகேசனைக் கொலை செய்தவர்கள் மீது வழக்கு குற்ற எண் 356/2003-ல் பதிவு செய்யப்பட்டது. 2004-ம் ஆண்டு இந்த வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. அதன்பின் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் இருவரும் இவ்வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர்.
கண்ணகியின் தந்தை துரைசாமி, அண்ணன் மருதுபாண்டியன், ரங்கசாமி, முருகேசன் சித்தப்பா அய்யாசாமி, கந்தவேலு, ஜோதி, வெங்கடேசன், மணி, முருகேசன் உறவினர் குணசேகரன், தனவேல், அஞ்சாபுலி, ராமதாஸ், சின்னதுரை, சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன், இன்ஸ்பெக்டர் செல்லமுத்து உட்பட 15 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கு கடலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு எண் 3/2019-ல் நடந்தது. இந்த வழக்கில் 81 பேர் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டு கடலூர் எஸ்.சி - எஸ்.டி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இதில் 36 பேர் பிறழ் சாட்சியாக மாறினர்.
இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தமராஜா இன்று தீர்ப்பு கூறினார். அத்தீர்ப்பில், கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டியனுக்குத் தூக்குத் தண்டனையும், ரூ. 4.65 லட்சம் அபராதமும் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், சம்பவத்தின் போது இன்ஸ்பெக்டராக இருந்து, பின்னர் டி.எஸ்.பியாகி ஓய்வு பெற்றுள்ள செல்லமுத்து, அப்போது சப்- இன்ஸ்பெக்டராக இருந்து, பின்னர் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று லஞ்ச வழக்கில் பணியிடம் நீக்கம் செய்யப்பட்டுள்ள தமிழ்மாறன் இருவருக்கு ஒரு ஆயுள் தண்டனையுடன், ஒரு லட்சத்து 15 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும், இருவரும் தலா 3 லட்ச ரூபாய் முருகேசனின் பெற்றோருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். கண்ணகி அப்பா துரைசாமி உட்பட 12 பேருக்கு 3 ஆயுள் தண்டனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியதுடன், அவர்கள் தலா ரூ. 4.15 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கினார். அதேசமயம் முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி, உறவினர் குணசேகரன் இருவரும் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
சாதி மாறி திருமணம் செய்து கொண்டவர்களைக் கொலை செய்து எரித்த சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை, 3 ஆயுள் தண்டனை, ஒரு ஆயுள் தண்டனை மற்றும் பல லட்சங்கள் அபராதத் தொகை விதித்து வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு கடலூர் மாவட்டத்தில், தமிழக அளவில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.