
கடலூர் மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச்செயலாளர் தேன்மொழி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கடலூர் மாவட்டம் திருமுட்டம் வட்டம் ஸ்ரீராமன் கிராமத்தைச் சேர்ந்த தலித் பெண் தனலஷ்மி என்பவர் (42) கடந்த பகல் 12 மணி அளவில் ஊருக்கு அருகில் உள்ள மோட்டார் பம்பு செட்டுக்கு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது அந்த மோட்டார் கொட்டகையில் குளித்த மற்றொரு பெண்ணின் செல்போன் மூலம் ஏற்கனவே அவருக்கு பழக்கமாக இருந்த எழுந்திரவானம் குப்பம் கிராமத்தைச் சார்ந்த பழனி என்பவருடன் பேசி இருக்கிறார்.
பின்பு மோட்டார் கொட்டகைக்கு குளிக்கச் சென்ற தனலட்சுமியைக் காணவில்லை. அவரது மகன் மற்றும் உறவினர்கள் தேடியபோது தனலட்சுமி திருமுட்டம் சாய்பாபா கோவிலுக்கு அருகில் வாய்க்காலுக்கு அருகில் நான்கடி உயரமுள்ள மொட்டை முருங்கை மரத்தில் குத்துக்காலிட்டு அரை நிர்வாண கோலத்தில் தான் கட்டியிருந்த புடவையால் தூக்கிட்டு இருப்பதுபோல் இருக்கச் செய்துள்ளனர்.
சம்பவ இடத்துக்குச் சென்று நேரில் பார்க்கின்றபோது தற்கொலை செய்ததற்கான எந்த முகாந்திரமும் இல்லை. வாய்க்காலில் இருந்து உடலை மேலே இழுத்ததற்கான அடையாளங்கள் இருக்கிறது என தனலட்சுமியின் தந்தை கலியபெருமாள் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
வாய்க்காலில் உட்கார்ந்து சாப்பிட்ட ஸ்னாக்ஸ் உள்ளிட்ட பொருட்கள் சிதறிக் கிடக்கின்றன. எனவே தனலட்சுமியின் சாவு தற்கொலை அல்ல எனத் தெளிவாகத் தெரிகிறது.
எனவே சம்பந்தப்பட்ட பழனியும் அவரது மகன்களையும் அழைத்து உடன் விசாரித்து வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கிட மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து தலித் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. கரோனா வைரஸ் காலத்தில் தொடர்ந்து பாலியல் வன்புணர்வுகள், தலித் பெண்கள் படுகொலைகள் தொடர்ந்து நடந்தவண்ணம் இருப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனத் தமிழக அரசை அனைத்திந்திய மாதர் சங்கம் கேட்டுக் கொள்கிறது என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
