/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_93_0.jpg)
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள காடாம்புலியூரை சேர்ந்தவர் செல்வம்(எ)செல்வமுருகன்(40). இவருக்கு பிரேமா என்ற மனைவியும், மதன்(26) என்ற மகனும், லீனா(12) என்ற மகளும் உள்ளனர். முந்திரி வியாபாரம் செய்து வந்த இவர்கள் தொழில் சம்பந்தமாக சொந்த ஊரான காடாம்புலியூரிலிருந்து நெய்வேலி இந்திராநகர் பகுதியில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 28.10.2020 அன்று நெய்வேலி பிளாக் எண் 26 - ல் காவியா என்ற பெண் அணிந்திருந்த செயினை பறித்ததாக செல்வமுருகன் மீது நெய்வேலி வடக்குத்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார். பின்னர் விருத்தாச்சலம் கிளை சிறையில் கடந்த 30.10.2020 அன்று அடைக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து கடந்த 02-ஆம் தேதி செல்வமுருகனுக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதாக கூறி சிறைத்துறை அதிகாரிகள் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். பின்பு செல்வமுருகனை விருத்தாச்சலம் கிளை சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
மீண்டும் கடந்த 04-ஆம் தேதி வலிப்பு ஏற்பட்டதாக கூறி செல்வமுருகன் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு மீண்டும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அப்போது மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவி பிரேமாவுக்கும், நெய்வேலி மற்றும் விருத்தாச்சலம் காவல் நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஆனந்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் குற்றவியல் நடுவர் ஆனந்த், வீடியோ ஆதாரத்துடன், செல்வமுருகன் மனைவி, மகன், மகள் மற்றும் அவரது உறவினர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார். பின்னர் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த செல்வமுருகன் உடலை உறவினர்கள் முன்னிலையில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். பின்னர் செல்வமுருகன் சடலம் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் செல்வமுருகன் மனைவியான பிரேமா மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமூரி, காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் ஆகியோரிடம் தனது கணவர் இறப்பில் மர்மம் உள்ளதாகவும், காவல்துறையினர் துன்புறுத்தியதால்தான் உயிரிழந்ததாகவும், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனு அளித்தார். அத்துடன் பிரேமா பிள்ளைகள், உறவினர்களுடன் 06.11.2020 அன்று சென்னை- கும்பகோணம் சாலையில் காடாம்புலியூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதையடுத்து அங்கு விரைந்து சென்ற டி.எஸ்.பி பாபு பிரசாந்த், வட்டாட்சியர் பிரகாஷ் மற்றும் போலீசார் சாலை மறியல் செய்தவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போதும் பிரேமா, தன்னுடைய கணவர் சாவில் மர்மம் இருக்கிறது, போலீசார் தான் அடித்து துன்புறுத்தி கொலை செய்துள்ளதாக சந்தேகப்படுகிறேன். எனவே சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும், தனது குடும்பத்திற்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் நிவாரணம் வழங்கவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை கூறினார். அதனைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதிளித்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டனர்.
இதனிடையே காவல்நிலையத்தில் துன்புறுத்தப்பட்டதால்தான் செல்வமுருகன் உயிரிழந்ததாக கூறி அவரது இறப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், அவரது குடும்பத்திற்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் என்றும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/IMG-20201114-WA0066.jpg)
அதேசமயம் விருத்தாசலம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார். அதேபோல் கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் 8 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மனித உரிமை ஆணையமும் விசாரணை செய்து வருகிறது.
மேலும் செல்வமுருகன் மனைவி பிரேமா கோரிக்கை வைத்ததன் பேரில் டி.ஐ.ஜி திரிபாதி சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து சி.பி.சி.ஐடி போலீசார் வழக்கு பதிந்து செல்வமுருகன் குடும்பத்தினர், நெய்வேலி காவல்நிலையம் மற்றும் விருத்தாசலம் கிளைச் சிறையில் சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்தினர். ஆனாலும் தனது கணவர் சாவில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் செல்வமுருகனின் மனைவி பிரேமா சடலத்தை இன்னும் வாங்கவில்லை. அத்துடன் தனது கணவர் மரணத்தை கொலை வழக்காக மாற்ற வேண்டும் எனவும், இன்ஸ்பெக்டர் அளவிலான புகாரை இன்ஸ்பெக்டர் அளவிலான சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் விசாரிக்கக்கூடாது என்று பிரேமா உயர் நீதிமன்றத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் விசாரணை சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி வசம் மாற்றப்பட்டது. அதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்தும் விதமாக, சி.பி.சி.ஐ.டி துணை காவல் கண்காணிப்பாளர்(DSP) குணவர்மன் 11.11.2020 முதல் விசாரணையை தொடங்கியுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/இன்ஸ்பெக்டர் ஆறுமுகம்.jpg)
இந்த நிலையில் சிறைக்கைதி மரணத்தில் கைதியின் குடும்பத்தினரால் குற்றம் சாட்டப்பட்டுள்ள நெய்வேலி நகரிய காவல் நிலைய ஆய்வாளர் ஆறுமுகம் அதிரடியாக கடலூர் முதுநகர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டார். சி.பி.சி.ஐ.டி விசாரணையில் தொய்வு ஏற்படாமல் இருப்பதற்காகவும், ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு உள்ளதாலும் இட மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)