
கடலூர் மாவட்டம் சாத்தமாம்பட்டு, பஞ்சன் மகன் விஜய் என்பவர் கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் தனது தந்தை பஞ்சன்(47) என்பவர் சாத்தமாம்பட்டு பூவராயர் முந்திரிதோப்பில்மர்மமான முறையில் இறந்து கிடப்பதாகவும், விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறும் குறிப்பிட்டிருந்தார்.
அவர் கொடுத்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் விஜயபாஸ்கர் வழக்குப் பதிவு செய்து சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர். இவ்வழக்கை நெல்லிக்குப்பம் காவல் நிலைய ஆய்வாளர் வீரமணி விசாரணை மேற்கொண்டதில் பஞ்சன் சசிக்குமாரிடம் மது வாங்கி குடித்துவிட்டு அவரை பற்றியே ஊரில் தவறாகப் பேசி வருவதாகவும், அவரை கொலை செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டு தனது நண்பர் ஜெயபிரகாஷ் உடன் சேர்ந்து கொலை செய்ததாகவும் ஒத்துக்கொண்டனர்.
அதனடிப்படையில் சாத்தமாம்பட்டு மேற்குத் தெரு மாசிலாமணி மகன் சசிகுமார்(28), சிலம்பிநாதன்பேட்டை செஞ்சிவேல் மகன் ஜெயபிரகாஷ் (எ) பிரகாஷ் (25) ஆகிய இருவரும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையிலடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சசிக்குமார் மீது காவல் நிலையத்தில் ரவுடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது. இருவரின் குற்றச் செய்கையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் பரிந்துரையின் பேரில்,மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி ஓராண்டு காலம் குண்டர் தடுப்புக் காவலில் வைக்க ஆணையிட்டதின் பேரில் இருவரும் ஓராண்டு குண்டர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
இபோல் கடந்த 08.10.2020 அன்று வேப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா மற்றும் போலீசார் மது கடத்தலை தடுக்கும் வகையில் சிறுபாக்கம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பெரியாயி அம்மன் கோயில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சிறுபாக்கம் அடுத்த சித்தேரி, வடக்குத் தெருவைச் சேர்ந்த ராயபிள்ளை என்பவரின் மகன் மருதமுத்து (27) என்பவர் 120 லிட்டர் சாராயம் வைத்திருந்ததால் அவரை மடக்கிப்பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே 4 வழக்குகள் உள்ள நிலையில் இவரின் குற்றச் செய்கையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு ஓராண்டு காலம் குண்டர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
இதனிடையே புதுச்சேரி மாநிலம், வில்லியனூர், மணவெளியைச் சேர்ந்த வேலு என்பவரது மகன் ஜாக்(எ)ஜெகன்(32) என்பவர் கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் அடுத்த நல்லாத்தூரைச்சேர்ந்த தனசேகரன் என்ற இரும்பு வியாபாரியை மிரட்டி 50,000 பணம் பறித்ததாக தூக்கணாம்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த 13-ஆம் தேதி புகார் செய்திருந்தார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதனை கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் இருந்தபடி பணம் கேட்டு மொபைல் போனில் மிரட்டியதாக முக்கிய குற்றவாளியான ஜாக் என்கிற ஜெகன் கைது செய்யப்பட்டு, கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகாமூரி உத்தரவின் பேரில் குண்டர் தடுப்புக் காவலில் சிறைப்படுத்தப்பட்டார். இவ்வழக்கின் மற்றொரு குற்றவாளியான மதன் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஒரே நாளில் நான்கு பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)