cuddalore government officer

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரத்திற்கு உட்பட்ட பூந்தோட்டம் பகுதியில் உள்ள 16, 17-வது வார்டுகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் இல்லாமல் மக்கள் மிகுந்த அவதியடைந்து வந்துள்ளனர்.

Advertisment

இது குறித்து, நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் விருத்தாசலம் - சிதம்பரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதையடுத்து தகவலறிந்த விருத்தாசலம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

Advertisment

ஆனால், பொதுமக்கள் காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்கு உடன்படாததால் சுமார் இரண்டு மணி நேரத்திற்குமேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதேநேரம், நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்குத் தாமதமாக வந்ததால், சாலை மறியல் போராட்டம் நீண்டது. இந்நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற நகராட்சி ஆணையர் பொறுப்பில் இருக்கும் பாண்டுவிடம், பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளைச் சொல்ல முற்படும்போது, ஆவேசப்பட்ட நகராட்சி பொறுப்பு ஆணையர் பாண்டு, "நான் யாருக்கும் அடிமை இல்லை" என்று ஆவேசமாகத் திட்டி பேசியுள்ளார். இதனால், அதிருப்தியடைந்த பொதுமக்கள், மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுப்பதற்காக அதிகாரிகளிடம் பேசியுள்ளதாகக் கூறிய பின்பு, போராட்டத்தைக் கைவிட்டனர். நகராட்சி அதிகாரியின் பொறுப்பற்ற பேச்சால் பெரும் பரபரப்பு நிலவியது.