Skip to main content

முகநூலில் அவதூறாக சித்திரிப்பு! கல்லூரி மாணவியும், மாமனும் தற்கொலை! பெண்கள் மீதான வன்கொடுமையை தடுக்க ஜி.கே.மணி கோரிக்கை!

கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த குறவன்குப்பத்தை சேர்ந்த  22 வயது மாணவி ஒருவர் கடலூர் தனியார் கல்லூரியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.  இவர் வீட்டிற்கு அருகாமையில் உள்ள  பன்னீர்செல்வத்தின் மகன் பிரேம்குமார்(22). இவருக்கும் அந்த மாணவிக்கு மாமன் விக்னேஷ் என்பவருக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை மனதில் வைத்து கொண்டு, அவ்வப்போது பிரேம்குமாரும், அவரது  தந்தை பன்னீர்செல்வமும்  அந்த மாணவிக்கு பலமுறை  மனதளவில் தொந்தரவு கொடுத்தும், மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பிரேம்குமார்  முகநூலில் அந்த மாணவி பற்றி  அவதூறாக பதிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.  

 

cuddalore girl case and pmk protest

 

இதனை முகநூலில் பார்த்ததும்,  அதிர்ச்சியடைந்த மாணவி மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதே சமயம்  இச்செய்தியை கேட்ட அப்பெண்ணின் மாமாவான விக்னேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மந்தாரகுப்பம் காவல் நிலையத்தில் அவரது உறவினர்கள் மற்றும் பாமகவினர் மாணவியின் இறப்புக்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்தனர். புகார் அளித்து பல மணி நேரம் ஆகியும் காவல்துறையினர் விசாரனை மேற்கொள்ளவில்லை என்று விருத்தாசலம் - கடலூர் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக  சாலை மறியலில் ஈடுப்பட்டு கொண்டிருந்த போது, மர்ம நபர்கள் மறியலில் ஈடுபட்டவர்கள் மீீது கற்களை வீசி தாக்கினர். இதில் செய்தி சேகரித்து கொண்டிருந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்  கிருஷ்ணன் என்பவர் மண்டை உடைந்து இரத்தம் கொட்டியது. இதனால் பெரும் பதற்றம் நிலவியது.  அப்போது அங்கு வந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின்பேரில் அதிவிரைவு படையினர் தடியடியில் நடத்தியதால்  பொதுமக்கள் தெறித்து ஓடினர். 


இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி, அவரது மாமன் விக்னேஷ் ஆகியோரின் குடும்பத்தினரை பா.ம.க மாநில தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, "எந்தத் தவறும் செய்யாத அந்த மாணவி, விக்னேஷ் இருவர் தற்கொலை என்பது திட்டமிட்ட செய்யப்பட்ட கொலையாகும்.  கருவேப்பிலங்குறிச்சி திலகவதி, குறிஞ்சிப்பாடி அனிதா,  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெண்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தும் வன்முறைக் கும்பலால் கடலூர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பதற்றம் நிறைந்த மாவட்டமாக உள்ளது. இதற்கு காரணமான நாடக காதல் கும்பல் நயவஞ்சகமாக பெண்களின் வாழ்க்கையை சீரழித்து வருகின்றனர்.  

பெண்களின் பாதுகாப்புக்கு நிரந்தரமான சூழ்நிலை இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் வன்முறைக் கும்பலின் அராஜகம் தான்.  இரண்டு உயிர் போன நிலையில் காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.  அதற்கான காரணத்தைக் கேட்டால் காவல்துறை தடியடி நடத்தி பயமுறுத்துகிறது.  இதுபோன்ற சம்பவங்களை பாமக வன்மையாக கண்டிக்கிறது. பெண்களை பள்ளி,  கல்லூரிகளுக்கு அனுப்புவதற்கு பெற்றோர்கள் பயப்படுவதும், பெண்கள் சம உரிமை,  பெண்கள் பாதுகாப்பு போன்றவை இல்லாமல் போவதற்கு இதுபோன்ற வன்முறை கும்பல் தான் காரணம்.  அவ் வன்முறைக் கும்பல் மேல் புகார் அளிக்கச் சென்றால் வன்கொடுமை சட்டத்தின் கீழ் பெண்களின் வாழ்க்கை பறிபோவது மட்டுமில்லாமல் ஜெயிலுக்கு போக வேண்டும் என்பது தான் தற்போது நாட்டின் நிலைமையாக உள்ளது.

இந்த இருவரின் சாவுக்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும், இளம் வயது பெண்ணை கடத்தி கொண்டு போன குற்றவாளியான பிரேம்குமார் வீட்டை காட்டியதற்காக அந்த மாணவியை அவதூறாக சித்தரித்து தற்கொலைக்கு தூண்டிய பிரேம்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவ்வாறு சரியான நடவடிக்கை காவல்துறை எடுக்காவிட்டால் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடலூர் மற்றும் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும்"  என்றார்.

இதனிடையே பிரேம்குமார் மாவட்ட கண்காணிப்பாளர் முன்னிலையில் சரணடைந்தார்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...