Skip to main content

வனத்துறை துப்பாக்கிச் சூடு; பலியான காவலாளி - பேசித் தீர்த்த எம்.எல்.ஏ! 

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

 

Cuddalore Forest issue MLA Maharajan

 

கூடலூர் வனப்பகுதியில் 28ம் தேதி இரவு வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் குள்ளப்ப கவுண்டன்பட்டியைச் சேர்ந்த தோட்டக் காவலாளி ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே பலியானார். அதைக் கண்டித்து உறவினர்கள் இரண்டு நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இறந்தவரின் உடலையும் வாங்க மறுத்து வந்தனர். அவர்களை எம்.எல்.ஏ. சமரசம் செய்து உடலை வாங்க வைத்தார்.

 

தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே இருக்கும் குள்ளப்ப கவுண்டன்பட்டியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் வயல்களுக்குத் தண்ணீர் பாய்ச்சி காவல் காக்கும் பணியில் இருந்து வந்தார். இவருக்கு உமா என்ற மனைவியும், திருநாவுக்கரசு என்ற மகனும், லினோ என்ற மகளும் உள்ளனர். 28ம் தேதி இரவு ஈஸ்வரன், வண்ணாத்திப்பாறை ரிசர்வ் வனப்பகுதிக்குள் வேட்டையாட முயன்றதாகவும் அப்போது அப்பகுதியில் ரோந்து வந்த வனத்துறையுடன் ஏற்பட்ட தகராறில் வனத்துறையினர் அவரைச் சுட்டுக் கொன்றதாகவும் 29ம் தேதி அதிகாலையில் அவரது உறவினர்களுக்குத் தகவல் கிடைத்தது. 

 

ஆனால், 28ம் தேதி இரவே காவல்துறை, வனத்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தையும், இறந்த ஈஸ்வரனின் உடலையும் பார்வையிட்டு, பின் அவர்களது உத்தரவின் பேரில் பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் எனக் குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. ஈஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அறிந்ததும் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் 29ம் தேதி காலை கம்பம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். ஈஸ்வரன் உடல் அங்கு இல்லாததாலும், தேனிக்கு கொண்டு சென்றது குறித்தும் அவர்களிடம் தகவல் தெரிவிக்காததாலும் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். 

 

Cuddalore Forest issue MLA Maharajan

 

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் உத்தமபாளையம் ஏ.எஸ்.பி. மதுக்குமாரி தலைமையில், டி.எஸ்.பி. சக்திவேல், கம்பம் தெற்கு இன்ஸ்பெக்டர் லாவண்யா உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சாலை மறியலால் கம்பம் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

மறியலில் ஈடுபட்ட ஈஸ்வரன் உறவினர்கள் போலீசாரிடம், ‘வயல்வெளிக்கு தண்ணீர் கட்டும் வேலை செய்பவர் வேட்டையாடச் சென்றார் என்கிறார்கள். சம்பவம் 28ம் தேதி இரவு 9.00 மணிக்கு நடந்துள்ளது. உயர் அதிகாரிகள் அனைவரும் வந்து பார்த்துச் சென்றுள்ளனர். ஆனால் இது குறித்து எங்களிடம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. அதிகாரிகள் இது குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும்’ என்றனர். 

 

வனத்துறையினர் லோயர் கேம்ப் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், ‘கூடலூர் வனச்சரக எல்கைக்குட்பட்ட வண்ணாத்திப்பாறை காப்புக்காடு பகுதியில் சட்ட விரோதமாக மின்வேலி அமைத்து வன விலங்குகளை வேட்டையாடுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வனவர் திருமுருகன் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு இரு பிரிவுகளாகப் பிரிந்து சென்றபோது, முடநாரி புதுப்பாலம் அருகே வன விலங்கு வேட்டையாட தரையில் கட்டியிருந்த கம்பியில் மின் இணைப்பு கொடுத்திருந்ததைப் பார்த்துள்ளனர். இதனால் வனப்பகுதியில் அவர்கள் தேடுதல் நடத்தியபோது அங்கிருந்த குள்ளப்பகவுண்டன் பட்டியைச் சேர்ந்த ஈஸ்வரனை பிடித்து அவரிடமிருந்து அரிவாளை பறிமுதல் செய்துள்ளனர். அப்போது அருகே டார்ச் வெளிச்சம் தெரிந்ததால் அங்கு யார் யார் உள்ளார்கள் எனக் கேட்டுக் கொண்டிருந்தபோது, ஈஸ்வரன் வனவர் திருமுருகனையும், பென்னியையும் கீழே தள்ளிவிட்டு வனப் பகுதிக்குள் ஓடினார். வனத்துறையினர் பின்னால் ஓடிச் சென்று பிடித்து இழுத்தபோது அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்த முற்பட்டார். அப்போது திருமுருகன், தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் ஈஸ்வரனை நோக்கி சுட்டார். அதில் ஈஸ்வரன் இறந்தார்’ எனப் புகார் கொடுத்துள்ளனர்.

 

ஆனால், இதனைப் பாதிக்கப்பட்ட ஈஸ்வரன் குடும்பத்தினரும், பொதுமக்களும் ஏற்கவில்லை. வேண்டுமென்றே ஈஸ்வரனை வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அவர்கள்  மீது வழக்குத் தொடர வேண்டும்.  தமிழக அரசு எங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என ஈஸ்வரன் குடும்பத்தினரும், உறவினர்களும் ஆட்சியர் அலுவலகம் முன்பாகச் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து போலீஸ் அதிகாரிகளும், ஆட்சியரின் நேர்முக உதவியாளரும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததன் காரணமாக நேற்று (30ம் தேதி) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Cuddalore Forest issue MLA Maharajan

 

நிகழ்விடத்திற்கு வந்த ஆண்டிபட்டி எம்.எல்.ஏ.வான மகாராஜன், அவர்களைச் சந்தித்து சமாதானம் செய்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுது பாதிக்கப்பட்ட ஈஸ்வரனின் மகனுக்கு ரேஷன் கடையில் வேலை வாங்கித் தருவதாகவும், முதல்வர் நிவாரண நிதி வாங்கித் தருவதாகவும் உறுதியளித்தார். அதோடு வனத்துறையின் மீதும் வழக்கு தொடரப்படும். அந்த வழக்கில் அவர்கள் மீது தவறு எனத் தெரிய வந்தால் அவர்களுக்குத் தகுந்த தண்டனையும் வாங்கிக் கொடுப்பேன் என்று உறுதியளித்தார். 

 

இதனை ஏற்றுக்கொண்ட ஈஸ்வரன் குடும்பத்தினரும், உறவினர்களும் போராட்டத்தைக் கைவிட்டனர். அதன்பின் பிரேதப் பரிசோதனை செய்த ஈஸ்வரன் உடலைப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்  சொந்த ஊரில் அடக்கம் செய்யக் கொண்டு சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்