Skip to main content

கடலூர் என்கவுண்டர் வழக்கு; சிபிசிஐடிக்கு மாற்றம்...!

Published on 19/02/2021 | Edited on 19/02/2021

 

Cuddalore Encounter Case Change to CBCID

 

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சுப்பராயலு நகரைச் சேர்ந்த வீரா என்கிற வீராங்கையன் (30), கடந்த 16-ஆம் தேதி இரவு 10 பேர் கொண்ட கும்பலால் கொல்லப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக பண்ருட்டி வீரப்பெருமாநல்லூர் சோதனைச்சாவடி அருகே பைக்கில் தப்பிச் செல்ல முயன்ற 5 பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். மேலும் கொலையில் தொடர்புடைய மற்றவர்களைப் பிடிப்பதற்காக, முக்கியக் குற்றவாளியான கடலூர் குப்பங்குளத்தைச் சேர்ந்த முருகன் மகன் கிருஷ்ணன் (30) என்பவர் அளித்த தகவலின் பேரில், அவரை குடுமியான்குப்பம் ஓடை பகுதிக்குப் போலீசார் அழைத்துச் சென்றனர்.

 

அப்போது கிருஷ்ணன் போலீசாரைத் தாக்கிவிட்டுத் தப்பி ஓட முயன்றபோது அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். அதையடுத்து அவரது சடலம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்தச் சம்பவத்தில் கிருஷ்ணன் தாக்கியதில் காயமடைந்த உதவி ஆய்வாளர் தீபன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரிடம் குற்றவியல் நடுவர் (எண்2) மணிமாறன் புதன்கிழமை (17.02.2021) மாலை விசாரணை செய்தார்.

 

இதனிடையே உடற்கூறாய்வு செய்யப்பட்ட கிருஷ்ணனின் சடலத்தை வாங்காமல் அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட கிருஷ்ணனின் தாயார் லட்சுமி, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (18.02.2021) புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், "எனது மகன் ஓவியராகவும், இசைக்குழுவில் டிரம் வாசிப்பவராகவும் செயல்பட்டு வந்தார். அவர் மீது எந்தக் குற்ற வழக்கும் இல்லாத நிலையில் போலீசார் அவரை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். இந்தச் செயலில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்ய வேண்டும்.

 

கிருஷ்ணனின் சடலத்தை தங்கள் தரப்பு மருத்துவர் முன்னிலையில் மீண்டும் உடற்கூறாய்வு செய்வதுடன், அதை வீடியோ ஒளிப்பதிவு செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் கிருஷ்ணனின் வருமானத்தை நம்பியே குடும்பம் நடத்தி வந்ததால், அவரது மனைவிக்கு அரசு வேலையும், குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடும் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைத்து டி.ஐ.ஜி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்