Cuddalore dt Kullanchavadi area Rajkumar Prince incident

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி என்ற பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகள் பிரின்சி (வயது 17). இவர் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் இன்று (12.03.2025) இவர் நண்பர்களுடன் புதுச்சத்திரம் அருகே உள்ள பெரியகுப்பம் கடற்கரைக்குச் சென்று கடலில் குளித்துள்ளார். அப்போது அலையின் சீற்றம் அதிகமாக இருந்ததால் அலையில் சிக்கி இவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

Advertisment

இதனைப்பார்த்த உடன் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சோபுரம் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். இதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் மாணவியைச் சிகிச்சைக்கு அழைத்து வந்த ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீபன்ராஜ், திவாகர் ஆகிய இருவரையும் மாணவியின் உறவினர்கள் தாக்கியுள்ளனர். இதனைக் கண்டித்து ஆலப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

Advertisment

சுமார் 15 நிமிடத்திற்கு மேல் நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக சிதம்பரம் டி.எஸ்.பி. லாமேக் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் கலைந்து போகச் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.