Cuddalore dt Collector order veeracholapuram village incident 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆழங்காத்தான் ஊராட்சியில் வீரசோழபுரம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் ஓரமாக ராஜன் வாய்க்கால் உள்ளது. இதனால் இந்த கிராமத்தில் உயிரிழந்தவர்களின் உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் இந்த ராஜன் வாய்க்காலைக் கடந்துதான் செல்ல வேண்டும். முன்னதாக இந்த கால்வாயைக் கடக்ககட்டப்பட்ட இரண்டு நடைபாலங்களும் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

அதே சமயம் இந்த வாய்க்காலில் தற்போது தண்ணீர் அதிக அளவில் செல்வதால் அங்குள்ள பொதுமக்கள் இந்த வாய்க்காலைக் கடக்கச் சிரமப்பட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் வீரசோழபுரத்தைச் சேர்ந்த கலியபெருமாள் (வயது 85) என்பவர் வயது மூப்பு காரணமாக நேற்று (07.11.2024) உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலை ராஜன் வாய்க்காலில் கழுத்து அளவு ஆழத்தில் ஓடக்கூடிய தண்ணீரில் இறங்கி இடுகாட்டிற்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி மக்கள் மனதைப் பதைபதைக்க வைத்தன.

Advertisment

இந்நிலையில் மயானத்திற்கு வாய்க்காலைக் கடந்து செல்ல வீரசோழபுரம் கிராமத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய நடைபாலம் அமைக்கப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். அதே சமயம் நிரந்த பாலம் அமைக்கும் வரை மயானத்திற்குச் செல்ல ஏதுவாக தற்காலிக பாலம் உடனடியாக அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.