கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் நகராட்சிக்கு உட்பட்ட 18- ஆவது வார்டு வடக்கு பெரியார் நகர் நுகர்பொருள் வாணிபக்கழக குடோன் பின்புறம் மற்றும் விவேகானந்தர் தெரு, ஆசிரியர் தெரு பகுதிகளில் 500- க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கடந்த சில ஆண்டுகளாக குடிநீர், கழிவுநீர் கால்வாய், தெரு மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவுமின்றி அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து விருத்தாசலம் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் தெரு மின்விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்த பகுதிகளை சாதகமாக்கிக் கொண்டு தினமும் இரவு நேரங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகரித்து வழிப்பறி, திருட்டு போன்ற அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புள்ளது.

இதனால் அச்சமும், ஆத்திரமும் அடைந்த அப்பகுதி மக்கள் நேற்றிரவு தெருக்களில் உள்ள மின்கம்பங்களில் தீப்பந்தங்களை கட்டியும், கையில் தீப்பந்தங்களை ஏந்தியும் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் தங்கள் பகுதியில் நீண்ட காலமாகவே கழிவுநீர் கால்வாய் இல்லாததால் தெருக்களில் சாக்கடை நீர் தேங்கி மழைக்காலங்களில் தெருக்கள் முழுவதும் சேறும் சகதியுமாக மாறி, நடப்பதற்கு கூட வழியின்றி தவித்து வருவதாகவும், இதனால் பல நோய் தாக்குதல்களுக்கு ஆளாவதாகவும், தெரு மின்விளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் அருகிலுள்ள முட்புதர்களிலிருந்து பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீடுகளுக்குள் வருவதால் குழந்தைகள், பெண்கள் என அனைவரும் மிகுந்த அச்சத்தில் வாழ்வதாகவும், தெரு மின் விளக்குகளை சரி செய்து தருமாறு பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் கூறியும், முதலமைச்சர் குறைதீர் முகாமில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாகவும், இதனால் கடந்த சில தினங்களாக மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அசம்பாவிதங்கள் நடைபெறுமோ என்ற அச்சத்தில் இருந்து வருவதாகவும் புகார் கூறினர்.

அதனைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சமாதானம் கூறியதால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.