Skip to main content

கந்துவட்டி கொடுமையால் முடிதிருத்தும் தொழிலாளி மனைவியுடன் தீக்குளிக்க முயற்சி! 

Published on 07/07/2020 | Edited on 07/07/2020

 

cuddalore district virudhachalam husband and wife deputy collector office

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பூதாமூர் காந்தி ரோட்டைச் சேர்ந்த தம்பதி ஐயப்பன்- காமாட்சி. இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகள், 13 வயதில் ஒரு மகன் உள்ளனர். ஐயப்பன் தனது வீட்டிலேயே சலூன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர்களது குடும்பச் செலவுக்காக ஐயப்பன் கடந்த ஐந்து வருடத்திற்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த வெங்கட் என்பவரிடம் ஐந்து பைசா வட்டி வீதம் 80 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கடனாக வாங்கியுள்ளார். 

 

கடன் வாங்கியதில் இருந்து மாத மாதம் வட்டியையும், அசலையும் திருப்பிக் கொடுத்து வந்துள்ளார். இதற்கிடையில் பணம் வாங்கியதற்குப் பிணையமாக 5 பவுன் தங்க நகையும் கொடுத்துள்ளார். இந்நிலையில் தற்போது திரும்ப நாற்பதாயிரம் தரவேண்டும் எனக் கூறி கடந்த சில நாட்களாக வெங்கட் தொந்தரவு செய்து வந்துள்ளார். தற்போது கரோனா ஊரடங்கு காலத்தில் வருமானமின்றி உள்ள சூழ்நிலையில் ஐயப்பனிடம் தினமும் பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்து வந்த வெங்கட் நேற்று முன்தினம் (05/07/2020) ஐயப்பனின் வீட்டிற்குத் தனது ஆதரவாளர்களுடன் சென்று ஐயப்பனின் இரு சக்கர வாகனத்தைப் பிடுங்கிக்கொண்டு சென்றுள்ளனர். 

 

இதனைத் தட்டிக் கேட்டபோது ஐயப்பனையும், அவரது மனைவி காமாட்சியையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் அச்சமடைந்த ஐயப்பன் அவரது மனைவி காமாட்சி இருவரும் விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்றனர். அப்போது 'மீண்டும் ஒருமுறை வெங்கட்டிடம் சென்று கேளுங்கள்' என அறிவுரை கூறி போலீசார் அனுப்பியுள்ளனர். 

 

இதனால் விரக்தியடைந்த கணவன்- மனைவி இருவரும் நேற்று (06.07.2020) விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெயைத் தங்களது உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தனர். இதனையறிந்த சார் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து, அவர்கள் கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனையும், தீப்பெட்டியையும் பிடுங்கி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். 

 

http://onelink.to/nknapp

 

பின்பு அவர்களின் பிரச்சினையைக் கேட்டறிந்த சார் ஆட்சியர் பிரவீன்குமார் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் மனு கொடுத்துச் சென்றனர். 

 

கந்து வட்டி கொடுமையால் கணவன், மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அண்ணனை கொலை செய்த தம்பி; உடந்தையாக இருந்த தாயும் கைது

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
The brother who attack his brother; The accomplice mother was also arrested

குடிபோதையில் தாயிடம் தகராறு செய்த அண்ணனை தம்பி கொலை செய்ததும், அதற்கு உடந்தையாக இருந்த தாயும் கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி பீமநகர் சேர்ந்தவர் பர்வீன் பானு (வயது 48). இவருக்கு தமிமுன் அன்சாரி (வயது 33), சையது அபுதாஹிர் ( 29) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் தமிமுன் அன்சாரி ஆட்டோ டிரைவராகவும், டீ மாஸ்டராகவும் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 5 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

குடி போதைக்கு அடிமையான தமிமுன் அன்சாரியின் நடவடிக்கை பிடிக்காததால் அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். அதன் பின்னர் தினமும் தமிமுன் அன்சாரி தனது தாயிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்து வந்தார். நேற்று இரவு தனது தாயிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு அடிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதனைக் கண்ட தம்பி சையது அபுதாஹிர் வீட்டில் இருந்த  அரிவாளால் தமிமுன் அன்சாரியின் தலையில் வெட்டினார். இருப்பினும் ஆத்திரம் அடங்காமல் அவரது கழுத்தில் மின்வயரை சுற்றி இறுக்கினார். இதில் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே தமிமுன் அன்சாரி இறந்து விட்டார். விபரீதத்தை உணர்ந்த பர்வீன் பானு அதிகாலை 4 மணி அளவில் யாரும் அறியாத வகையில் சையது அபுதாகீருடன் சேர்ந்து தமிமுன் அன்சாரியின் உடலை அவரது ஆட்டோவிலேயே ஏற்றிக்கொண்டு கொள்ளிடம் ஆற்றில் நீரில் போட்டு விட்டு வர முடிவு செய்தார்.

அதன்படி கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் உடலை இறக்கும் போது இருசக்கர வாகனங்கள் வரவே உடலை அங்கேயே போட்டுவிட்டு ஆட்டோவில் தப்பி விட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த உடலை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.பாலத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவினை ஆய்வு செய்து ஆட்டோ நம்பரை கண்டுபிடித்தனர். பின்னர் ஆட்டோ உரிமையாளர் யார்?  மாநகர  சிசிடிவி கேமரா பதிவின் அடிப்படையில் கொலையாளிகள் பர்வீன் பானு மற்றும் சையது அபுதாகிர் என உறுதி செய்தனர்.

இதனைத் தொடர்ந்து வீட்டில் பதுங்கி இருந்த இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

14 மாவட்டங்களுக்கு மழை அலர்ட் 

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
 Rain alert for 14 districts

தமிழகத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத்  தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி மற்றும் கோவையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் இரவு 7 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியான அறிவிப்பின்படி கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களிலும் தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.