
கடலூர் மாவட்டம் சிப்காட்டில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் இன்று (13/05/2021) காலை திடீரென பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை முழுவதும் அணைத்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர்.
விபத்து ஏற்பட்ட ரசாயன ஆலையில் கடலூர் மாவட்ட எஸ்.பி., தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் ஆகியோர் நேரில் ஆய்வுசெய்தனர். பின்னர், மருத்துவமனைக்குச் சென்ற அமைச்சர், சிகிச்சைப் பெற்றுவரும் தொழிலாளர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, உயிரிழந்த தொழிலாளர்களின்உறவினர்கள் ரசாயன ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் தொழிற்சாலை நிர்வாகத்தின் அலட்சியமே இந்த விபத்துக்குக் காரணம் எனக் குற்றம் சாட்டினர்.