Skip to main content

கடலூர்: சம்பள குறைப்பைக் கண்டித்து  தூய்மை பணியாளர்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்! 

Published on 12/07/2020 | Edited on 12/07/2020

 

 

cuddalore district sanitary workers salary issues

கடலூர் மாவட்டம், திட்டக்குடி பேரூராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் 29 பெண்கள் உட்பட 40 பேர் தூய்மை பணியாளர்களாக  பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் திட்டக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 பேரூராட்சிகளிலும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பேரூராட்சி சார்பாக தினசரி ஆண்களுக்கு 225 ரூபாயும், பெண்களுக்கு 200 ரூபாயும் கணக்கிட்டு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில் தற்போது கரோனா ஊரடங்கை காரணம் காட்டி மார்ச் மாதத்திலிருந்து ஜுன் மாதம் வரை 1000 மட்டுமே வழங்கப்பட்டது. மேலும் ஜுன் மாதத்திலிருந்து ஆண்களுக்கு 220 ரூபாய் என கணக்கிட்டு 6600 ரூபாயும்,  பெண்களுக்கு ரூபாய் 170 என கணக்கிட்டு 5 ஆயிரம் ரூபாயும் வழங்குவதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து அதிகாரியிடம் சென்று கேட்டால் ஆட்குறைப்பு செய்துவிடுவதாக மிரட்டி வருவதாகவும் கூறுகின்றனர்.

 

இதனால் ஆத்திரமடைந்த தூய்மைப் பணியாளர்கள் நேற்று (11/07/2020) பணியைப் புறக்கணித்து திட்டக்குடி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பேரூராட்சி அதிகாரிகள் சம்பளம் வழங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட செயல் அலுவலரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதையடுத்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அதிகளவில் உயிரிழப்பு தமிழகத்தில்தான்” - தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணையத் தலைவர் வேதனை

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
Allegation of not paying salaries to sanitation workers in Tamil Nadu on due dates

தமிழ்நாட்டில் தூய்மை பணியாளர்களுக்கு உரிய தேதியில் சம்பளம் வழங்கப்படுவதில்லை என தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணைய தலைவர் வேதனை தெரிவித்துள்ளார்.

சேலத்தில் தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தமிழ்நாட்டில் தூய்மை பணியாளர்களுக்கு உரிய தேதியில் சம்பளம் வழங்கப்படுவதில்லை. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். சீருடை, பாதுகாப்பு உபகரணங்களை ஒப்பந்ததாரர்கள் 10 நாட்களுக்குள் வழங்க வேண்டும்; இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பணியின் போது தூய்மை பணியாளர்கள் அதிக அளவில் உயிரிழக்கின்றனர்.

ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மாநாராட்சி நிர்வாகமே ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவது போன்று, தமிழக அரசும் நேரடியாக தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். இதனால் அவர்களின் பிரச்சினை 60 சதவீதம் வரை குறையும்.

தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்புக்காக தேசிய ஆணையம் இருப்பதுபோல, மாநில ஆணையத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும். 2022 முதல் நிரந்தர தூய்மைப் பணியாளர் ஓய்வுபெற்றால், அந்த இடத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கலாம் என்ற உத்தரவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். மேலும், தூய்மைப் பணியாளர்கள் வேறு தொழிலுக்குச் செல்ல விருப்பப்பட்டால், அவர்களுக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும்” என்றார்.

Next Story

பெண் தூய்மைப் பணியாளர் கார் மோதி பலி; ரூ. 5 லட்சம் நிதியுதவி

Published on 10/11/2023 | Edited on 10/11/2023

 

Female sanitation worker incident Rs. 5 lakhs in financing

 

சென்னை மாநகரில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் இரவு நேரங்களிலும் தூய்மைப் பணியில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் சென்னை திருவான்மியூர் ஆர்டிஓ அலுவலகம் இருக்கக்கூடிய பகுதியில் பணியாளர் பெண்கள் சிலர் நேற்று அதிகாலை 3 மணி அளவில் வழக்கம்போல் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஐடி பணியை முடித்துவிட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்த அஸ்வின் என்ற நபர் தூக்கக் கலக்கத்தில்  சிவகாமி என்ற பெண் துப்புரவுப் பணியாளர் மீது மோதி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சிவகாமி உயிரிழந்தார்.

 

அப்போது அவருடன் பணியாற்றிய சக பணியாளர் பெண்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தூய்மைப் பணியாளர் சிவகாமிக்கு 3 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் சாலை விபத்தில் உயிரிழந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்தினருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து மற்றும் ரூ.5 இலட்சம் நிதியுதவி அறிவித்து இருந்தார்.

 

இந்நிலையில் திருவான்மியூர் சாலை விபத்தில் உயிரிழந்த தூய்மைப் பணியாளர் சிவகாமி குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 இலட்சம் வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று துரைப்பாக்கம், கண்ணகி நகரில் உள்ள மறைந்த சிவகாமி இல்லத்திற்கு நேரில் சென்று ரூ.5 இலட்சத்திற்கான காசோலையினை அவரது குடும்பத்தாரிடம் வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.