CUDDALORE DISTRICT REGISTRATION OFFICE VIGILANCE OFFICERS RAID

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சார்பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது. விருத்தாசலத்தைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து பத்திரப்பதிவு, ஆன்லைன் பட்டா பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.

Advertisment

இந்நிலையில் சார் பதிவாளர் அலுவலகத்தில், முறைகேடாக இடைத்தரகர்கள் மூலம் பணம் பரிமாற்றம் செய்வதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அலுவலகத்திற்கு நேற்று (10/12/2020) மாலை 05.00 மணியளவில் திடீரென லஞ்ச ஒழிப்புத் துறையின் துணை போலீஸ் சூப்பிரண்டு மெல்வின் ராஜாசிங் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், திருவேங்கடம், மாலா ஆகியோர் கொண்ட குழுவினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

Advertisment

அப்போது அலுவலகத்தில் வெளியில் நின்றுக்கொண்டிருந்த எழுத்தர்கள், பத்திர பதிவிற்காக வந்திருந்தவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் என அனைவரையும் அலுவலகத்திற்கு உள்ளே அழைத்துச் சென்று, பின்பு அலுவலகத்தை மூடிவிட்டு, சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது கணக்கில் வராத ரூபாய் 2.66 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

அதைத் தொடர்ந்து, சார்பதிவாளர் கணேசன் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்தனர். அதேபோல் கணக்கில் வராத 2.66 லட்சம் ரூபாய் எவ்வாறு வந்தது? லஞ்சமாக அதிகாரிகள் வாங்கி உள்ளனரா? என பல்வேறு கோணங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

விருத்தாச்சலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி ஆய்வு மேற்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.