cuddalore district panruti judge house incident police investigation

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள காடாம்புலியூரைச் சேர்ந்தவர் மணிகண்டன். விவசாயியான இவருடைய மனைவி ராஜேஸ்வரி கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார். அதனால் இவர்கள் தற்போது கள்ளக்குறிச்சியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

Advertisment

அதே சமயம் விடுமுறை நாட்களில் காடாம்புலியூரில் உள்ள தங்கள் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இவர்களது வீட்டின் அருகே பண்ருட்டியைச் சேர்ந்த கணேஷ் என்பவர் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். நீதிபதியின் வீட்டின் பின்புறம் கட்டிடப் பணிகளுக்காக ஜல்லி உள்ளிட்ட பொருட்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளன.

Advertisment

இந்நிலையில் நேற்று (22/05/2020) காலை மணிகண்டனின் தம்பி நீலகண்டன் கட்டிடப் பொருட்கள் எடுத்து வந்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு உள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக காடாம்புலியூர் போலீசாருக்கும் தனது அண்ணன் மணிகண்டனுக்கும் தகவல் கொடுத்தார். அதையடுத்து பண்ருட்டி டி.எஸ்.பி (பொறுப்பு) சங்கர் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர்கள் அம்பேத்கர், மலர்விழி, ரேவதி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர்.

cuddalore district panruti judge house incident police investigation

அப்போது நேற்று முன்தினம் (21/05/2020) இரவு நீதிபதி வீட்டின் பின்புறக் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், பின்னர் அருகிலுள்ள அடகுக் கடையின் பின்புறக் கதவை உடைத்து உள்ளே நுழைந்து அங்குள்ள லாக்கரை உடைப்பதற்கு முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த லாக்கரை உடைக்க முடியாமல் போனதால் வெளியில் வைக்கப்பட்டிருந்த ஏழு கிலோ வெள்ளிப் பொருட்களை மட்டும் கொள்ளையடித்தனர்.

Advertisment

அதேசமயம் அடகுக் கடையில் தங்க நகைகளைக் கொள்ளை அடிக்க முடியாமல் போனதால் ஏமாற்றமடைந்த கொள்ளையர்கள் நீதிபதி வீடு எனத் தெரியாமல் மற்றொரு கதவையும் உடைத்து மீண்டும் வீட்டிற்குள் புகுந்துள்ளனர். வீட்டினுள் நான்கு அறைகளில் இருந்த அலமாரிகளை உடைத்து அவற்றிலிருந்த 35 பவுன் நகைகளையும், ரூபாய் 50,000 பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளது தெரிய வந்தது. கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தின் மதிப்பு சுமார் 40 லட்சம் ரூபாய் இருக்கும் என்று தெரியவருகிறது.

http://onelink.to/nknapp

இதனிடையே இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த நீதிபதி குடும்பத்தினர் காடாம்புலியூர் வீட்டிற்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்திருப்பதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கைரேகை நிபுணர்கள் கொள்ளை நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனாலும் கொள்ளையடித்த மர்மநபர்களைக் கண்டுபிடிக்க இயலவில்லை.

இந்தக் கொள்ளை நடந்த இடம் காடாம்புலியூர் காவல் நிலையத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அதேபோல் நீதிபதி வீட்டில் நடந்துள்ள இந்தக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.