Skip to main content

கடலூர்: என்.எல்.சி பாய்லர் வெடித்து தீ விபத்து! சிகிச்சை பலனின்றி தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு!

Published on 09/05/2020 | Edited on 09/05/2020

 

cuddalore district nlc boiler incident labour


கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. பழுப்பு நிலக்கரி மூலம் இங்கு தயாரிக்கப்படும் மின்சாரம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா,  தமிழ்நாடு, புதுச்சேரி எனத் தென்மாநிலங்களின்  மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது.


இந்நிலையில் நேற்று முன்தினம் (07.05.2020) மாலை இரண்டாவது அனல் மின் நிலையத்தின் அலகு 6- இல் நிலக்கரி எரியூட்டும் கொள்கலன் எனப்படும் பாய்லர் வெடித்ததால், அப்பகுதி முழுவதும் பெரும் கரும் புகை சூழ்ந்தது. இதனைப் பார்த்த அக்கம் பக்க கிராமத்தினர் மற்றும் தொழிலாளர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
 

cuddalore district nlc boiler incident labour


இந்தத் தீ விபத்தில் பாய்லர் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த பலரும் தீக்காயங்களுடன் கதறியபடியே வெளியே ஓடி வந்தனர். உடல் முழுவதும் 60 சதவீத தீக்காயங்களுடன் ஓடிவந்த 8 தொழிலாளர்களை மீட்டு நெய்வேலி என்.எல்.சி மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நிரந்தர தொழிலாளர் சர்புதீன் (53) என்பவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில்  உள்ளனர்.


இதனிடையே கரோனா பாதிப்பு காரணமாக ஆட்குறைப்பு செய்யப்பட்டு 50% தொழிலாளர்களே சுழற்சி முறையில் பணியாற்றுகின்றனர். ஆட்கள் பற்றாக்குறை காரணமாகவும், என்.எல்.சி நிறுவனத்தில் போதிய பராமரிப்பு இல்லாததாலும் தொடர்ச்சியாகப் பல்வேறு விபத்துகள் நிகழ்ந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட் இயந்திரம் தீப்பற்றி எரிந்ததால், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. நிறுவனத்தின் அலட்சியம் காரணமாக விபத்துகள் நிகழ்ந்து வருவதாகவும், இதனால் பல லட்சம் மதிப்புள்ள இயந்திரங்கள் சேதமடைவதுடன், விலை மதிக்க முடியாத தொழிலாளர்களின் உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து நேர்வதாகவும் கவலைப்படும் தொழிற்சங்கத்தினர் ‘உடனடியாக அனைத்து இயந்திரங்களையும் பழுது நீக்கம் செய்ய வேண்டும்’ எனக் கோரிக்கை வைக்கின்றனர்.

கடந்த வாரம் ஏற்பட்ட விபத்தின் காரணங்களைக் கண்டறிவதற்குள் அடுத்த ஒரு பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்; கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

Published on 30/07/2023 | Edited on 30/07/2023

 

child issue court judgement for labourer

 

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.

 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சந்திரபிள்ளைவலசு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 31). கூலித்தொழிலாளியான இவர், கடந்த 2014 ஆம் ஆண்டு, அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த 6 ஆம் வகுப்பு மாணவனை கழிப்பறைக்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். மேலும் அந்தச் சிறுவனை பலமுறை மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

 

இதையறிந்த பள்ளி ஆசிரியர்கள், மாணவனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் வாழப்பாடி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் ஹரிகிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, சிறுவனிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஹரிகிருஷ்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஜூலை 28 ஆம் தேதி தீர்ப்பு அளித்தார். மேலும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. 

 

 

Next Story

வடமாநிலத் தொழிலாளர் மர்ம மரணம்; போலீசார் தீவிர விசாரணை

Published on 23/05/2023 | Edited on 23/05/2023

 

erode north indian labour incident police investigation started

 

ஈரோடு மாவட்டம் தாசில்தார் தோட்டத்தில் முரளிதரன் என்பவருக்குச் சொந்தமான சலவைப் பட்டறை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான வடமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இதே வளாகத்தில் உள்ள வீடுகளில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நிக்கில் (வயது 23) என்ற வாலிபர் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு முரளிதரனின் சலவைப் பட்டறையில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.

 

இந்நிலையில் நேற்று நிக்கில் வேலைக்கு செல்லாததால் உடன் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் அவரது அறைக்கு வந்தனர். அப்போது அவரது அறையில் நிக்கில் உடல் தீப்பிடித்து எரிந்த நிலையில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நிக்கில் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மேலும் நிக்கில் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். நிக்கிலுடன் உடன் வேலை பார்க்கும் சக தொழிலாளர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் சந்தேகம் மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே கொலைக்கான உண்மை நிலவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். .வடமாநிலத் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.