Skip to main content

"என்.எல்.சி. விபத்துக்கு அலட்சியமே காரணம்! கூடுதல் இழப்பீடு, நிரந்தர வேலை வழங்க வேண்டும்"- எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை!

Published on 14/07/2020 | Edited on 14/07/2020


 

cuddalore district neyveli nlc employees dmk leader paneerselvam

 

என்.எல்.சி. நிர்வாகத்தின் அலட்சிய போர்க்கால இரண்டாம் அனல் மின்நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு கூடுதல் நிவாரணமும், அவர்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என தி.மு.க சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து தி.மு.க கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "என்.எல்.சி இரண்டாம் அனல் மின் நிலையத்தில் 5 மற்றும் 6 யூனிட்களில் பாய்லர் வெடித்த விபத்தில் இதுவரை ஒப்பந்த, இன்கோசர்வ், நிரந்தரத் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் என 20 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தொடர் உயிரிழப்புகளும், மேலும் 10 பேர் படுகாயமடைந்து, மேல் சிகிச்சையிலுள்ள நிகழ்வுகள் மிகவும் மனவேதனையையும், வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. 

 

இரண்டாம் அனல் மின் நிலையத்தில் கடந்த வருடம் 2019 ஜுன் 9 மற்றும் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் ஆறாவது யூனிட்டிலும், தற்சமயம் ஐந்தாவது யூனிட்டில் எனத் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவது, நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் தான் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.  இதுவரை 20 உயிர்களைக் காவு வாங்கிய பின்பும் மெத்தன போக்கைக் காட்டும் என்.எல்.சி நிர்வாகத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து எடுத்ததாகக் கூறப்படும் நடவடிக்கைகள் மற்றொரு விபத்தைத் தவிர்க்க போதுமானதாக இல்லாமல் இருப்பதனால், அப்பாவி தொழிலாளிகளின் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோகிறது. இதனால் இவர்களின் குடும்ப வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.  

 

இந்த விபத்துகள் குறித்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிற நிலையில் விபத்துகள் மேலும் மேலும் நடைபெறுவது வருத்தமளிக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் என்.எல்.சி நிர்வாகத்தின் முறையான பராமரிப்பு இல்லாததே ஆகும். பாய்லர் பராமரிப்புப் பணிகளை, அதனை நிறுவிய மத்திய அரசு நிறுவனமான பெல் நிறுவனத்திற்குக் கொடுக்காமல் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு தரமற்ற பணிகள் மேற்கொள்வதால்தான் தொடர் விபத்துகள் ஏற்படுகிறது என்று தெரிவிக்கின்றனர். இந்த விபத்துகள் குறித்து அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழு உரிய விசாரணை நடத்தி, விபத்துக்கான உண்மையான காரணத்தை நடுநிலையோடு கண்டறிந்து நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும்.

 

மேலும் என்.எல்.சியில் இதுபோன்ற விபத்துகள் நடப்பது சமீப காலத்தில் வாடிக்கையாகி விட்டது. தொடர்ந்து நிர்வாகம் இதுபோன்ற விபத்துகள் நடக்காத வண்ணம் அங்கு பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பிற்கான உத்திரவாதத்தை அளித்திட வேண்டும். மேலும் உயிரிழந்த மற்றும் காயமடைந்துள்ளவர்களுக்கு நிர்வாகம் அறிவித்துள்ள நிவாரணத் தொகை மிகச் சொற்ப அளவிலானதாகவே உள்ளது.

 

அந்தத் தொகையும் அங்குப் பணிபுரிபவர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்து தரப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது கேலிக்கூத்தான முடிவாகும். சாதாரணமாகச் சாலை விபத்துகளில் கிடைக்கும். இழப்பீட்டுத் தொகையே இதற்குச் சமமாக இருக்கும்போது, நிறுவனத்தின் உற்பத்திக்காகவும், அதன் வளர்ச்சிக்காவும் தங்கள் உயிரையே கொடுத்தவர்களுக்கு நிர்வாகம் தன் பங்காக அளிக்கும் நிவாரணம் எவ்வளவுதான் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். இந்த மாவட்டத்தின் இயற்கை வளத்தைச் சுரண்டியும், ஒருகாலத்தில் ஆர்டீஷியன் நீரூற்றுகள் நிறைந்த இந்த மாவட்டத்தின் நீர் ஆதாரத்தை நிலக்கரி வெட்டியெடுக்க பாழாக்கிய இந்நிறுவனம் CSR FUND- ஐ சென்ற வருடம் மத்திய அமைச்சர் ஃபியூஸ்கோயல் மூலம் ரயில்வே துறைக்குக் கொண்டு சென்றிருக்கும் நிலையில், மீண்டும் இந்த வருடமும் வட இந்தியாவுக்கே அந்தத் தொகையை முழுவதுமாகக் கொண்டு செல்ல திட்டமிடப்படுவதாக அறிகிறேன். 

 

இப்படி இங்கே லாபம் ஈட்டும் பணத்தைப் பாதிக்கப்படும் தொழிலாளியின் குடும்பங்களுக்கும் மற்றும் இந்த மாவட்ட மக்களுக்கும் கொடுக்க மனம் வராதது வேதனையளிக்கிறது. அதேபோல் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் வாரிசுகளுக்குக் கண்டிப்பாக அவர்களின் கல்வித் தகுதிற்கேற்ப, தகுதியான வேலைவாய்ப்பை வழங்கிட வேண்டும். இந்தத் தொடர் விபத்துகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

 

http://onelink.to/nknapp

 

குறிப்பாக தமிழக முதலமைச்சர் இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டு, பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்பட்டும் நிர்வாகத்திற்கு எந்தவித அழுத்தமும் கொடுக்காமல் வேடிக்கை பார்ப்பதைக் கைவிட வேண்டும். தலைவர் கலைஞர் முதல்வராக இருந்தபோது நெய்வேலி பிரச்சினைகளில் அவரே நேரிடையாக தலையிடுவதோடு, என்னையும் நிர்வாகத்தோடு கலந்துபேசி தீர்வுகாண வைப்பார். 

 

ஆனால், இப்போதோ ஆளும் கட்சியினர் இங்கு வந்து வேடிக்கை பார்த்துவிட்டு சென்று விடுகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென்று கேட்டுக்கொள்வதோடு, என்.எல்.சி.யில் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள், ஊழியர்களுக்குப் பணிபுரியும் இடத்தில் பாதுகாப்பு உத்திரவாதத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்." இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 ரூ.48 கோடியில் 504 அடுக்குமாடி குடியிருப்பு; பயனாளிகளிடம் ஒப்படைத்த அமைச்சர் 

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Minister Anbarasan handed over 504 flats constructed in Neyveli block to the beneficiaries

நெய்வேலி சமத்துவபுரம் அருகே தமிழ்நாடு நகர்ப்புற வாரியம் மூலம் ஏழை மக்களுக்கு குடியிருப்புகள் கட்டித் தர வேண்டும் என  தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுதுறை அமைச்சர் மற்றும்  நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன் ஆகியோர்  ஊரகத் தொழில் துறை அமைச்சர்  தா.மோ அன்பரசனிடம் கோரிக்கை வைத்தனர். 

இதனையெடுத்து  400 சதுர அடி கொண்ட 3 அடுக்குகளில் 504 குடியிருப்புகள்  ரூ 48.6 கோடி செலவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டது. அவ்வாறு கட்டப்பட்ட குடியிருப்புகளை  பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வே கணேசன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு குடியிருப்புக்கான சாவியை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது அவர் மாநிலத்தில் குடிசையற்ற வீடுகள் இருக்க வேண்டும் என்ற  நோக்கில் முன்னாள் முதல்வர் கலைஞர் குடிசை மாற்று வாரியத்தை தொடங்கி  விடற்ற ஏழைகளுக்கு  வீடுகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து  தற்போதைய முதல்வர் அத்துறையை நகர்ப்புற வாழ்விடம் மேம்பாடு வாரியம் என மாற்றி தற்போது வீடற்றவர்களுக்கு வீடு வழங்கி வருகிறார். அதை மக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் இந்த மாவட்டத்தில் ஏழைமக்கள் குடிசை வீடுகளில் மிகவும் மோசமான நிலையை கணக்கில் எடுத்து அவர்களுக்கும் இதுபோன்ற வீடுகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பேசினார். நெய்வேலி தொகுதி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் இப்பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட குடியிருப்புகளை இப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும். பயனாளிகள் விரைந்து விண்ணப்பித்து வீடுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

Minister Anbarasan handed over 504 flats constructed in Neyveli block to the beneficiaries

மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் இத்திட்டம் பயனாளிகளின் பங்களிப்புடன் கூடியது. பயனாளிகள் இந்த மாவட்டத்தை சேர்ந்தவராகவும் தனது பெயரில் பட்டா, வீடு இல்லாமலும்  மாத வருமானம் ரூ 25000 க்கு மிகாமல் இருத்தல்  வேண்டும்.  இதில் மாநில அரசு  ரூ.  6 லட்சமும் மத்திய அரசு  ரூ 1.5 லட்சமும், பயனளி பங்காக ரூ . 2 லட்சம் வரை இணைக்கப்பட்டுள்ளது. இதுவரை 105 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 230 பேரின் மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. பயனாளிகளுக்கு பொதுத்துறை வங்கிகள் மூலம் வங்கிக் கடன் செய்து தரப்படும் என்றார்.

இந்நிகழ்வில் பண்ருட்டி ஒன்றியக் குழு தலைவர் சபா.பாலமுருகன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் பாலமுரளிதரன் உள்ளிட்ட  வருவாய்த் துறையினர் காவல் துறையினர் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story

என்எல்சி நிறுவனத்தை கண்டித்து சிஐடியு தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
CITU union protest against NLC

நெய்வேலியில் உள்ள என்எல்சி நிர்வாகத்தில் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு குளறுபடிகளைக் கண்டித்து சிஐடியு தொழிற்சங்கம் மெயின் பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இதில் கலந்துகொண்ட சங்கத்தின் தலைவர் ஜெயராமன் மற்றும் பொதுச்செயலாளர் அரசு ஆகியோர் போராட்டம் குறித்துப் பேசுகையில், “என்எல்சி நிறுவனத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொழிலாளர், பொறியாளர், அதிகாரிகளுக்கு ஒரே மாதிரியான விடுப்புதான் வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் சென்ற மாதம் திடீரென பொறியாளர் - அதிகாரிகளுக்கு மட்டும் சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ‘ஒரு கண்ணில் வெண்ணெய் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு’ என்ற நிர்வாகத்தின் இந்நடவடிக்கை தொழிலாளர் மத்தியில் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அலுவலகத்தில் இரண்டாம் சனிக்கிழமை விடுமுறையை பயன்படுத்துபவர்களை தவிர்த்து சுரங்கம் மற்றும் தெர்மல் பகுதியில் 3 ஷிப்ட் ஆபரேஷனில் பணியாற்றுபவர்களுக்கு 8 நாட்களும், மூன்று ஷிப்ட் மெயின்டணன்ஸில் பணியாற்றுபவர்களுக்கு 7 நாட்களும் மற்ற அனைத்து பகுதிகளுக்கும் 6 நாட்கள் பொறியாளர் - அதிகாரிகளுக்கு மேற்கண்ட விடுப்பு Earn Leave அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு வரை சுரங்கத்தில் பணியாற்றிய ஆப்ரேஷன் தொழிலாளர்களுக்கு மாதத்திற்கு 3 நாள், மெயின்டனன்ஸ் மற்றும் NSU, தெர்மல் பகுதி தொழிலாளர்களுக்கு 2 நாள் என C-Off வழங்கப்பட்டு வந்தது. 2015 ஜூன் மாதத்தில் நிறுத்தப்பட்ட பிறகு OH விடுப்பு 5 நாட்கள் தொழிலாளர் - பொறியாளர் - அதிகாரிகளுக்கு சமமாக வழங்கப்பட்டது. C-Off பொறியாளர்களுக்கு கிடையாது.

ஊதிய உயர்வு மற்றும் UIS ஒப்பந்தம் கூட 2017 முதல் தொழிலாளர் - பொறியாளர்-அதிகாரிகளுக்கு ஏறக்குறைய ஒரே மாதிரியாகத்தான் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் பொறியாளர் - அதிகாரிகளுக்கு மட்டும் சிறப்பு விடுமுறை பர்னிச்சர் கடன் அநியாயமாகும். ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர் - பொறியாளர் மத்தியில் வித்தியாசத்தையும், பேதத்தையும் ஏற்படுத்திடும் நிர்வாகத்தின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது.

சில மாதங்களுக்கு முன்பு பர்னிச்சர் கடன் கொடுக்கப்பட்டது முதல் இன்று வரை பேச்சுவார்த்தையிலுள்ள சங்கங்கள் வாய்மூடி மவுனியாக இருப்பதன் மர்மம் என்ன? தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ள விடுப்பு, பர்னிச்சர் லோன் உள்ளிட்டவைகளை பெறுவதற்கு ஏன் குரல் எழுப்பவில்லை. பேச்சுவார்த்தை சங்கங்களின் இந்த மௌனம் தொழிலாளர்களை வேதனை அடைய செய்துள்ளது.

எனவே இரண்டாம் சனிக்கிழமை விடுமுறைக்கு பதிலாக அளிக்கப்படும் ஸ்பெஷல் அடிஷனல் லீவை 12-ஆக அளித்திடு! பர்னிச்சர் லோன், லேப் டாப், மொபைல் போன் உள்ளிட்ட சலுகைகளை வழங்கிடு! மிகை நேர பணிக்கு சி ஆப் வழங்கிடு என வலியுறுத்தி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் - ஊழியர்கள் திரளாக பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

வெளிமாநில இடமாற்றம்: நிறுவனத்தில் தொழிலாளர் - ஊழியர்களை பொறுத்தவரையில் நெய்வேலிக்கு வெளியே இடமாற்றம் செய்யும் நடைமுறை கிடையாது. ஆனால் சில தினங்களுக்கு முன்பு 6 பேர் வெளி மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. நிர்வாகத்தின் இந்நடவடிக்கையை பேச்சுவார்த்தை சங்கங்கள் தட்டிக் கேட்காமல் இருப்பது மவுனம் சம்மதத்திற்கு அறிகுறியாகிவிடும். வரும் காலத்தில் நிர்வாகம் தொழிலாளர்களை வெளி மாநிலங்களுக்கு பந்தாடுவதற்கு வழிவகுத்திடும் என்று சிஐடியு எச்சரிக்கை விடுக்கிறது. 60 ஆண்டுகளாக கடைப்பிடித்து வரும் நடைமுறையை தொடர்ந்திட வேண்டும் எனவும், போடப்பட்டுள்ள வெளிமாநில இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டுமெனவும் சிஐடியு கேட்டுக் கொள்கிறது” என்றார்.