Skip to main content

கடலூர் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர்! எதிர்பார்ப்புகளால் நிரம்பி வழியும் சமூக வலைதளங்கள்!

 

cuddalore district new collector peoples expectation

 

கடலூர் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வந்த  வெ. அன்புச்செல்வன் ஜூன் 30- ஆம் தேதி பணி ஓய்வு பெற்றதையடுத்து, தமிழக அரசால் சந்திரசேகர் சகாமுரி ஐ.ஏ.எஸ். புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டு, ஜூலை 1- ஆம் தேதி அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கோபிச்செட்டிப்பாளையம் மற்றும் அரியலூரில் சப்- கலெக்டராக பணியாற்றிய சகாமுரி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராகவும், நகரமைப்பு திட்ட இயக்குனராகவும் பணியாற்றி, பல்வேறு பணிமாறுதலுக்கு பிறகு கடலூர் மாவட்டத்தின் ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார்.

 

 

இந்நிலையில் கடலூர் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக சந்திரசேகர் சகாமுரி அறிவித்ததிலிருந்து அவரது நியமனம்  பற்றி, "புதிதாக நியமனம் என்று மட்டும் பதிவிட்டுப்போக மனமில்லை.. ஆகையால் அவர் பற்றிய தகவல்கள் தேடினேன்... தேடலில் சிக்கிய விஷயங்கள்" எனும் தலைப்புடன் யாரோ ஒருவர் பதிவிட்ட கட்டுரை சமூக வலைத்தளங்களில் வைரலாகி ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகளை மாவட்ட மக்களிடையே கிளப்பியுள்ளது. 

 

 

அந்த கட்டுரையில் 'சந்திரசேகர சகாமுரி மக்கள் சேவையை மகேசன் சேவையாக மதிப்பவர்' என தொடங்கி, 'மீண்டும் ஒரு வடநேரே', 'கோபிச்செட்டிப்பாளையத்தில் சப் கலெக்டராக இருந்த போது அதிரடி நடவடிக்கைகள் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவர் சந்திரசேகர சகாமுரி'. அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் வளைந்து கொடுக்காததால், அங்கிருந்து அரியலூருக்கு தூக்கியடிக்கப்பட்டார். இதனால் வீதிக்கு வந்து போராடினர் மக்கள்.

 

 

2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோபியில் பணி அமர்த்தப்பட்டது முதல் அதிரடியான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர். பல அரசியல் காரணங்களுக்காக அந்தியூர், சத்தி, கோபி, பவானி பகுதிகளில் கண்டுகொள்ளப்படாமல் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றினாராம். அரசு மருத்துவமனை மற்றும் பேருந்து நிலையங்களில் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டது, மணல் கடத்தலை தடுத்து அந்த வாகனங்களைப் பறிமுதல் செய்து அபராதம் விதித்தது என பல அதிரடிகளை அரங்கேற்றினாராம். திடீர், திடீரென அரசு அலுவலகங்களில் நுழைந்து அலுவலர்களைச் சோதனை செய்து, தவறுகளை தடுத்தார். டாஸ்மாக்குகளில் அதிக விலைக்கு சரக்குகள் விற்ற ஊழியர்களை சஸ்பெண்ட் செய்தார். 

 

 

பொதுக் கழிவறைகளை சோதனைசெய்து குறைகளை நிவர்த்தி செய்தார். மலைப் பாதைகளை சரிசெய்து கொடுத்து அங்கு பள்ளி மற்றும் ஆம்புலன்ஸ் சேவையை கொண்டுவந்தார். இரவு நேரங்களில் மாறுவேடத்தில் சென்று அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கள ஆய்வு செய்து தவறுசெய்யும் ஊழியர்களை சஸ்பெண்ட் செய்தார். உழவர் சந்தைக்கு மாறுவேடத்தில் சென்று அங்கு விவசாயிகளுக்கு தொந்தரவு தந்த வியாபாரிகள் மற்றும் சமூக விரோதிகளை வெளியேற்றினார். ஆதி திராவிட மாணவர் நலவிடுதியின் நிலை மற்றும் உணவின் தரம் ஆகியவற்றை பரிசோதனை செய்தார். பவானி விடுதியில் வார்டனுக்கு லஞ்சம் கொடுத்து தங்கியிருந்த வெளிநபர்களை வெளியேற்றி வார்டன் மீது நடவடிக்கை எடுத்தார். 45 ஆண்டு கால மக்கள் கோரிக்கையான வேதபாறை அணைத் திட்டத்தை செயல்படுத்தினார். 

 

 

சுதந்திரம் பெற்றது முதல் இன்று வரை இதுவரை எந்தவொரு அதிகாரியும் செல்லாத கத்தரிமலை என்ற பகுதிக்கு சென்று மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து நிவர்த்தி செய்தார். இதுபோன்ற நடவடிக்கைகளால் மக்களிடம் நன்மதிப்பு பெற்றவர்.

 

 

அடுத்து அரியலூர் சப் கலெக்டராக இருந்தபோது, நகராட்சி பகுதியில் முறையாக துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தததையடுத்து வார்டு வார்டாக துப்புரவு பணிகளை மேற்கொண்டார். 10- க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களில் விதிமுறைகளுக்கு விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தார் என ஏகப்பட்ட 'தார்........ தார்.....' எனும் எதிர்பார்ப்புகளுடன் பல பில்டப்கள் இடையே பொறுப்பேற்றுள்ளார் சகாமுரி. 

 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்