கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ளது மங்களூர் கிராமம். இந்த கிராமத்தைசேர்ந்த விவசாயி ஐயப்பன். இவர் தனது நிலத்தில் கோடை பயிராக எள் விதைத்துள்ளார். அது இப்போது வளர்ந்து செழித்து பூ பூத்த நிலையில் உள்ளது. இந்த எள் செடிகளை எலிகள் ஆங்காங்கே கடித்து நாசம் செய்து வந்துள்ளது. அந்த எலிகளை கட்டுப்படுத்த ஐயப்பன் தன் நிலத்தில் சில இடங்களில் எலி பேஸ்ட் வாங்கிவந்து வைத்துள்ளார். இதனால் எலிகள் இறந்துவிடும். எள் செடிகளை காப்பாற்றிவிடலாம் என்று ஐயப்பன் வீட்டில் நிம்மதியாக இருந்தார்.

Advertisment

Advertisment

பதினோராம் தேதி காலை பேஸ்ட்டை தின்றுவிட்டு எலிகள் இறந்து கிடக்கிறதா என்பதை பார்ப்பதற்காக தனது இடத்திற்கு சென்று சுற்றிப் பார்த்தார் ஐயப்பன். அவருக்கு பகிர் என்று ஆகிப்போனது. காரணம் எலிக்கு வைத்த பேஸ்ட்டை அந்தபகுதியில் உணவுக்காக மேய வந்த 6 மயில்கள், எலி பேஸ்ட்டை தின்றுவிட்டு ஆங்காங்கே இறந்து கிடந்துள்ளன. அதற்குள் மயில்கள் இறந்து கிடக்கும் தகவலை வனத்துறைஅலுவலர்களுக்கு சிலர் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து விருத்தாசலம் வனத்துறை அலுவலர் ரவி தலைமையில் வனவர் மணியரசன், வனக்காப்பாளர் சங்கர், வனக்காவலர் சிவானந்தன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இறந்து கிடந்த மயில்களை கைப்பற்றியதோடு மயில்கள் எலி பேஸ்ட் தின்று இறப்பதற்கு காரணமான விவசாயி ஐயப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுவாக கடலூர் மாவட்டத்தின் மேற்கு கடைக்கோடியில் உள்ள கிராமங்களை ஒட்டி வனத்துறைக்கு சொந்தமான காடுகள் பெருமளவில் உள்ளன. இந்த காடுகளில் மயில்கள், மான்கள், காட்டுப் பன்றிகள் அதிக அளவில் வாழ்கின்றன. இவை வனத்தை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்படும் பயிர்களை அப்போது வந்து தின்று அழித்து வருகின்றன.

இதை கட்டுப்படுத்துவதற்காக விவசாயிகள் தங்கள் நிலத்தை சுற்றி மின்வேலி அமைப்பார்கள். இதில் அகப்பட்டு வனவிலங்குகள் இறந்துள்ளன. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட பல விவசாயிகள் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறை, அபராதம் என்று சிக்கலில் மாட்டி உள்ளனர். இதையடுத்து இப்போதெல்லாம் விவசாயிகள் அதுபோன்று மின் வேலி அமைப்பது இல்லை என்கிறார்கள் அப்பகுதி விவசாயிகள். வனவிலங்குகளை துரத்துவதற்கு இரவு நேரங்களில் சென்று காவல் இருப்போம், ஏனென்றால் வன விலங்குகளை வதைப்பது கொல்வது சம்பந்தமான சட்டங்கள் கடுமையாக உள்ளதால் விவசாயிகள் யாரும் தவறான செயல்களில் ஈடுபடுவதில்லை. ஐயப்பன் போன்று ஒருசிலர் இதுபோன்ற தவறுகளை செய்து சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள் என்கின்றனர் அப்பகுதி விவசாயிகள்.

காடுகளை ஒட்டி வனத்துறை சார்பில் கம்பி வேலிகள் அமைத்து வன விலங்குகள் விளை நிலங்களுக்குள் வராத வகையில் தடுக்க வேண்டும். அப்படி செய்தால், எங்கள் விவசாயம் தழைக்கும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள்.