Skip to main content

கடலூர் மாவட்டம்; நகர்ப்புறத் தேர்தல் பதவியேற்பு! போட்டா போட்டி! சாலை மறியல் போராட்டம்!  

Published on 05/03/2022 | Edited on 05/03/2022

 

Cuddalore District local body election

 

கடலூர் நகராட்சி, பெரு நகராட்சியாக மாற்றப்பட்டு தற்போது மாநகராட்சியாக உயர்த்தப்பட்டுள்ளது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 45 வார்டுகளில் தி.மு.க 21 வார்டுகளிலும், அ.தி.மு.க 6 வார்டுகளிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலா 3 வார்டுகளிலும், பா.ம.க, பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகள் தலா 1 வார்டிலும், 3 சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர். தி.மு.கவுக்கு பெரும்பான்மை உள்ள நிலையில் தி.மு.க நகர செயலாளர் ராஜாவின் மனைவியும், 20-வது வார்டு உறுப்பினருமான சுந்தரி ராஜா மேயர் பதவிக்கு கட்சி தலைமையால் அறிவிக்கப்பட்டார். அதேபோல் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கிஷோர் என்கிற தாமரைச்செல்வன் துணை மேயர் பதவிக்கு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. 

 

அதேசமயம் மேயர் பதவிக்கு தி.மு.க மாவட்ட பொருளாளர் குணசேகரன் மனைவியும், 2-வது வார்டு உறுப்பினருமான கீதா குணசேகரன் களமிறங்கினார். அதையடுத்து 20க்கும் மேற்பட்ட தி.மு.க கவுன்சிலர்கள் கடத்தப்பட்டதாக நேற்று முன்தினம் (03.03.2022) தகவல் பரவியது. இந்த நிலையில் நேற்று காலை மேயர், பதவிக்கான மறைமுக தேர்தல் மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி விசுவநாதன் முன்னிலையில் நடைபெற்றது. வாக்கெடுப்பில் மொத்தமுள்ள 45 கவுன்சிலர்களில், 32 கவுன்சிலர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தி.மு.க வேட்பாளர் சுந்தரி ராஜா வேட்பாளராக மனு தாக்கல் செய்த நிலையில், தி.மு.க போட்டி வேட்பாளர் கீதா குணசேகரனும் வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் நடைபெற்ற தேர்தலில் 32 வாக்குகள் பதிவானதில் சுந்தரி ராஜா 19 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்து போட்டியிட்ட கீதா குணசேகரன் 12 வாக்குகள் பெற்று 7 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். 1 வாக்கு செல்லாததாக அறிவிக்கப்பட்டது. அதேசமயம் புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்த கவுன்சிலர்கள் சிறைபிடிக்கப்பட்டதால் வாக்களிக்க இயலவில்லை. அதேபோல் அ.தி.மு.கவை சேர்ந்த 6 கவுன்சிலர்கள் தேர்தலைப் புறக்கணித்தனர்.

 

பின்னர் வெற்றி பெற்ற மேயர் சுந்தரி ராஜாவுக்கு, தமிழக வேளாண் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,  புதுச்சேரி மாநில எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க அமைப்பாளருமின சிவா எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலையில்  தேர்தல் அதிகாரி விஸ்வநாதன் செங்கோல் வழங்கி, ரகசிய காப்பு பிரமாணம் செய்து, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற துணை மேயர் பதவிக்கான தேர்தலில் வி.சி.க தாமரைச்செல்வன் மட்டுமே மனுத் தாக்கல் செய்திருந்ததால் அவர் போட்டியின்றி வெற்றி பெற்றார். இதனிடையே தி.மு.க போட்டி வேட்பாளர் கீதா குணசேகரனின் கணவரும், தி.மு.க மாவட்ட பொருளாளருமான குணசேகரன் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை விழுங்கி, தற்கொலைக்கு முயன்று, பின்னர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதனால் ஆதரவாளர்கள், உறவினர்கள் மருத்துவமனை முன்பு மறியலில்  ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். 

 

இதேபோல் பண்ருட்டி நகராட்சியில்  மொத்தமுள்ள 33 வார்டுகளில் தி.மு.க கூட்டணி 24 வார்டுகளில் வெற்றி பெற்ற நிலையில் 2-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் சிவா நகர் மன்ற தலைவர் வேட்பாளராக தி.மு.க தலைமை அறிவித்தது. ஆனால் அவரை எதிர்த்து தி.மு.க நகர செயலாளரும், 26-வது வார்டு கவுன்சிலருமான டி ராஜேந்திரன் போட்டி வேட்பாளராக மனு தாக்கல் செய்தார். தேர்தலில் 33 கவுன்சிலர்களும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்த நிலையில் தி.மு.கவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் சிவாவுக்கு 16 வாக்குகளும், போட்டி வேட்பாளராக களம் கண்ட நகர செயலாளர் ராஜேந்திரனுக்கு 17 வாக்குகளும் கிடைத்தது. 1 ஓட்டு வித்தியாசத்தில் ராஜேந்திரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

 

Cuddalore District local body election

 

அதனைத் தொடர்ந்து மதியம் துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற இருந்தது. இந்த தேர்தலில் 16 கவுன்சிலர்கள் மட்டுமே பங்கேற்றனர். போதுமான கவுன்சிலர்கள் பங்கேற்காத காரணத்தால் துணைத் தலைவர் தேர்தல் ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து தி.மு.க தலைமையால் அறிவிக்கப்பட்டு தோல்வியடைந்த வேட்பாளர் சிவா தனது ஆதரவாளர்களுடன் நகராட்சி அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், "மறைமுக தேர்வில் குளறுபடி நடந்துள்ளது. எனவே மறு தேர்தல் நடத்த வேண்டும்' என வலியுறுத்தினார. அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

 

பண்ருட்டி நகராட்சியில் 7 வார்டுகளில் அ.தி.மு.க வெற்றி பெற்றிருந்த நிலையில் தேர்தலில், தி.மு.கவை சேர்ந்த 2 பேர் போட்டியிட்ட நிலையில் 7 அ.தி.மு.க கவுன்சிலர்கள் பங்கேற்று வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து மதியம் நடைபெற இருந்த துணைத் தலைவருக்கான தேர்தலில் தி.மு.க வேட்பாளர் ஆனந்த் சரவணன் போட்டியிடுவதாக இருந்த நிலையில் கூட்டத்திற்கு 16 பேர் மட்டுமே வந்திருந்ததால், போதுமான பலம் இல்லாததால் துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.  

 

இதேபோல் நெல்லிக்குப்பம் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ள நிலையில் தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் 17 வார்டுகளில் வெற்றி பெற்றனர். அதையடுத்து இந்த நகராட்சி  தலைவர் பதவி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு வேட்பாளராக 15-வது வார்டு கவுன்சிலர் கிரிஜா திருமாறன் அறிவிக்கப்பட்டார். அதேசமயம் தி.மு.கவை சேர்ந்த ஜெயந்தி ராதாகிருஷ்ணன் என்பவர் போட்டி வேட்பாளராக களம் இறங்கினார். அதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வேனில் வந்த வி.சி.கவை தவிர்த்த மற்ற உறுப்பினர்கள் நகராட்சி அலுவலகம் உள் நுழைய முயன்ற போது 'கூட்டணி கட்சிக்கு துரோகம் செய்யாதீர், 'கூட்டணி தர்மத்தை கடைபிடியுங்கள்' என விடுதலை சிறுத்தைகள் முழக்கமிட்டனர். காவல்துறை பாதுகாப்புடன் நகராட்சி அலுவலகத்துக்குள் கவுன்சிலர்கள் சென்ற நிலையில் தி.மு.க உறுப்பினர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார். பின்னர் நடைபெற்ற தேர்தலில் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் 23 வாக்குகள் பெற்று, வெற்றி பெற்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்க்கு 3 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தது. இதையடுத்து மீண்டும் போராட்டத்தில் இறங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்களுக்கு துணைத் தலைவர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் அதிலும் தி.மு.க நகர செயலாளர் மணிவண்ணனின் மனைவியும், 3-வது வார்டு உறுப்பினருமான ஜெயபிரபா என்பவர் போட்டியிட மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி கண்ட கிரிஜா திருமாறன் மீண்டும் போட்டியிட்டார்.  இந்த தேர்தலிலும் தி.மு.க நகர செயலாளர் மனைவி ஜெயபிரபா 22 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில் வி.சி.க வேட்பாளர்  கிரிஜாவுக்கு 6 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன. 

 

இதையடுத்து ஜெயபிரபாவிடம் சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ, அமைச்சர் கணேசனின் உதவியாளர் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தினர். ஆனால் ஜெயபிரபா அதற்கு உடன்பட மறுத்தார். மேலும் ஒரு கட்டத்தில் ஜெயபிரபா மயக்கமடைந்தார். அவரை ஏற்றிச் செல்ல வந்த ஆம்புலன்சை விடாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறித்து தகராறு செய்தனர். அதையடுத்து பெண் கவுன்சிலர்கள் ஜெயபிரபாவை தூக்கிவந்து ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பினர். அப்போது அங்கிருந்த புறப்பட்ட சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏவின் காரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்க முயன்றனர். நிலைமை கைமீறி சென்றதையடுத்து காவல்துறையினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தடியடி நடத்தி கலைத்தனர். அதன்பின்னரே காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை நடந்த போராட்டம் மறியல் முடிவுக்கு வந்தது.   

 

இதேபோல் மங்கலம்பேட்டை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க கூட்டணி 7 வார்டுகளில் வெற்றி பெற்றன. தே.மு.தி.க. 1 வார்டிலும், சுயேச்சைகள் 7 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். தி.மு.க கூட்டணி சார்பில் காங்கிரஸ் கவுன்சிலர் வேல்முருகன் பேரூராட்சி தலைவர் பதவிக்கு அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரை எதிர்த்து 8-வது வார்டில் தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற சம்சாத் பேகமும் வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தலில் சம்சாத் பேகம் 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை, காவல்துறையினர் அப்புறப்படுத்த முயற்சித்ததால் இரு தரப்பினரிடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற துணை தலைவருக்கான தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளர் வேல்முருகன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர் தாமோதரன் போட்டியிட்டார். இதிலும் காங்கிரஸ் வேட்பாளர் 5 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். எட்டு ஓட்டுகள் பெற்று தாமோதரன்  துறைத் தலைவராக அறிவிக்கப்பட்டார். 

 

விருத்தாசலம் நகராட்சிக்கான தலைவர் வேட்பாளராக டாக்டர் சங்கவி முருகதாஸும், துணைத்தலைவராக ராணி தண்டபாணியும் தி.மு.க தலைமையால் அறிவிக்கப்பட்டனர். இவர்கள் இருவரையும் எதிர்த்து யாரும் போட்டியிடாததால் இவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 

 

பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக மாற்றப்பட்ட திட்டக்குடி நகரசபை தலைவர் பதவிக்கு தி.மு.க சார்பில் 5வது வார்டு கவுன்சிலர் வெண்ணிலாவும், துணைத்தலைவர் பதவிக்கு தி.மு.க நகர செயலாளர் பரமகுருவும் அறிவிக்கப்பட்டு, இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். வடலூர் நகர மன்ற தலைவராக எஸ்.சிவக்குமார் துணைத்தலைவராக ஆர்.சுப்புராயலு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதேபோல் கடலூர் மாவட்டத்தில் உள்ள 13 பேரூராட்சிகளிலும், தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்தவர்கள் தலைவர் மற்றும் துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்