CUDDALORE DISTRICT INCIDENT POLICE INVESTIGATION

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகண்டன். இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவரது அண்ணன் மணிகண்டன், கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு இறந்த நிலையில், அவரது மனைவியும், அண்ணியுமான பஞ்சுவர்ணத்தை, மறு திருமணம் செய்து கொண்டார். அண்ணனின் இறப்பிற்குப் பிறகு, தனது மனைவி பஞ்சவர்ணம் மற்றும் தனது தாயார் சகுந்தலாவுடன் ஒன்றாக வசித்து வந்தார்.

Advertisment

இந்நிலையில் நேற்று (19/03/2022) இரவு 11.00 மணியளவில், மூன்று பேரும் தங்களுக்கு சொந்தமான குடிசை வீட்டில், தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென பலத்த சத்தத்துடன், சிலிண்டர் வெடித்து, வீடு தீப்பற்றி எரிந்தது. தீயானது வேகமாக பரவிய நிலையில், தீயில் சிக்கிக் கொண்ட தனது மனைவி மற்றும் தாயாரை, சிவகண்டன் வீட்டிலிருந்து வெளியே தள்ளியுள்ளார்.

Advertisment

இந்த நிலையில், தீயின் வேகம் அதிகரித்ததால், சிவகண்டன் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டினுள் சிக்கிக் கொண்டார். மேலும், அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர், தண்ணீரைக் கொண்டு தீயை அணைக்க தீவிர முயற்சி செய்தனர். ஆனால் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாததால், மங்கலம்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். உடல் முழுவதும் தீக்காயத்துடன் மீட்கப்பட்ட, சிவகண்டனின் மனைவி பஞ்சவர்ணம், அவரது தாயார் சகுந்தலா ஆகிய இருவரையும் அவசர ஊர்தி மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கிராம மக்கள் அனுப்பி வைத்தனர்.

பின்னர் தகவலின் பேரில், விரைந்து வந்த தீயணைப்பு துறை, காவல்துறையினர் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்பு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் உடல் முழுவதும் முற்றிலுமாக எரிந்த நிலையில் வீட்டினுள் இருந்த, சிவகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தீ விபத்தில் தீக்காயமடைந்த சிவகண்டனின் மனைவி பஞ்சவர்ணம் நான்கு மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது. 50 சதவீதத்திற்கு மேல் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ள, இருவருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து மங்கலம்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.