/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/IMG-20200708-WA0010.jpg)
சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்தவர்களாலும், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களாலும் கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று தொடர்ந்து வேகமாக பரவி வருகிறது. கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1,379 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (07/07/2020) வெளியான பரிசோதனை முடிவில் 64 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது.
அதையடுத்து கடலூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,379 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனா தொற்றிலிருந்து 930 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பண்ருட்டி லிங்க் ரோட்டில் வசித்து வந்த 73 வயதான ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் உடல்நலக்குறைவு காரணமாக, புதுச்சேரி கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. மற்ற 419 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றிய பெண் இன்ஸ்பெக்டர், சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.பியின் கன்மேன் ஆகியோருக்கு தொற்று உறுதியானதால் காவல்துறை வட்டாரத்தில் பீதி ஏற்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/IMG-20200708-WA0009.jpg)
இந்நிலையில் கடந்தவாரம் விருத்தாசலம் வட்டார வளர்ச்சி ஊழியர் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த ஊழியர் கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலக கூட்டத்திற்கு வந்து சென்று வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்துஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ராஜகோபால் சுங்ரா மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை நடத்த உத்தரவிட்டார்.
அதில் அலுவலக பணியாளர்கள் 7 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேலும் ராஜகோபால் சுங்ரா தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். அதேசமயம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், நகராட்சி அலுவலகம் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு மூடப்பட்டன.
இதனிடையே கடலூர் தலைமை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளராக உள்ள பெண் மருத்துவர், ஸ்கேன் பிரிவு மருத்துவர், இரு செவிலியர்கள் பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடியை சேர்ந்த சுகாதார செவிலியர்கள் இருவர், படை வீரர்கள் இருவர் என நேற்று 64 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. கடலூர் கேப்பர் மலையிலுள்ள வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் அந்த அலுவலகம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a2_30.jpg)
விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்க்கு கடந்த வாரம் தொற்று உறுதியானதை தொடர்ந்து, அந்த அலுவலகத்தில் பணிபுரியும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் உள்ளிட்ட 57 ஊழியர்களுக்கு கடந்த வாரம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனையில் வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட, ஐந்துஊழியர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்கள் ஐந்துபேரையும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, கரோனா சிறப்பு சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் பணிபுரிந்து வந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தற்காலிகமாக இழுத்து மூடப்பட்டது. இதனால் விருத்தாசலம்ஒன்றியத்திற்குட்பட்ட 51 ஊராட்சிகளின் வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் முடங்கிப் போயின. மேலும் அலுவலகம் முழுவதும் விருத்தாசலம் நகராட்சி பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினர், அரசு அலுவர்கள், ஊழியர்கள் என மருத்துவம், காவல் மற்றும் பொது பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் பொதுமக்களிடையை அச்சம் அதிகரித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)