Skip to main content

அரசு ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை; அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

Published on 05/01/2023 | Edited on 05/01/2023

 

cuddalore district government hospital issue in village assistant involved 

 

அரசு மருத்துவமனை மருத்துவ உபகரணங்களைச் சேதப்படுத்தி, மருத்துவரைத் தகாத வார்த்தையால் திட்டிய கிராம உதவியாளர் மற்றும் அவரது சகோதரிக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வருவாய்த் துறையில் கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வரும் வேல்முருகன் மற்றும் அவரது சகோதரி சுஜாதா ஆகிய இருவரும், தமது தந்தை கலியனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் கூறி, கடந்த 2018 ஆம் ஆண்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது பணியில் இருந்த மருத்துவர் விஜயவதி என்பவர் முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு, மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார். அப்போது வேல்முருகன் மருத்துவரை ஒருமையில் தகாத வார்த்தைகளால் திட்டியும், விலையுயர்ந்த மருத்துவ உபகரணங்களைச் சேதப்படுத்தியும் உள்ளார்.

 

இதுகுறித்து தலைமை மருத்துவர் சுவாமிநாதன், விருத்தாசலம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கினை விசாரித்த கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி பிரபா சந்திரன், அரசு தரப்பு சாட்சியங்கள் தெளிவாக உள்ளதால் அரசு ஊழியர் வேல்முருகன் குற்றவாளி என உறுதி செய்து, "இரண்டு பிரிவுகளின் கீழ் தலா ஐந்து ஆண்டுகள் என பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மருத்துவ உபகரணங்களைச் சேதப்படுத்தியதற்காக 7 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், வேல்முருகனின் சகோதரி சுஜாதாவிற்கு 1000 ரூபாய் அபராதமும், கட்டத் தவறினால் 10 நாட்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

 

அரசு மருத்துவமனையை அரசு ஊழியரே சேதப்படுத்திய வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கிய தீர்ப்பு நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆரணி காங்கிரஸ் எம்.பி. கடலூர் வேட்பாளராக அறிவிப்பு!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Arani Congress MP Cuddalore candidate announcement

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் கடலூர், குறிஞ்சிப்பாடி, விருத்தாச்சலம், பண்ருட்டி, திட்டக்குடி, மற்றும் நெய்வேலி சட்டமன்ற ஆகிய 6 தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் 14 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் வருகிற பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் சிவக்கொழுந்து போட்டியிடுகிறார். அதேபோல் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் இயக்குநர் தங்கர்பச்சான், நாம் தமிழர் கட்சி சார்பில் மணிவாசகம் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆரணி தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வரும் மருத்துவர் எம்.கே விஷ்ணுபிரசாத் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் செயல் தலைவராக உள்ளார். மேலும் இவர் கடந்த 2006 முதல் 2011 வரை செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 1972 ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி ஆவார். இவருக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவர் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸின் மைத்துனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் செய்யாறு தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த காலத்தில் செய்யாறு சிப்காட் தொழில் பூங்காவை நிறுவுவதில் முக்கிய பங்காற்றியுள்ளார். மேலும் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்த புறவழிச்சாலை அனுமதி பெற்று ஓச்சேரி பாலத்தை கட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆரணி தொகுதியில் தி.மு.க. போட்டியிடுவதால் இவர் கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Next Story

அரசு மருத்துவரால் உயிருக்குப் போராடும் இளம் பெண்! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Erode district thalavadi government doctor made wrong operation to woman

ஈரோடு மாவட்டம், தாளவாடியில் வசிக்கும் ஓட்டுநர் பிரதீப்குமாரின் மனைவி அனுபல்லவி. வயது 25. இவர்களுக்கு 5, 3 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாட்டு செய்யப்போய் தனக்கு நேர்ந்த அவலத்தை அனுபல்லவியே நம்மிடம் கூறுகிறார்.

“என்னுடைய வீட்டுக்காரர் டிரைவர். குடும்ப வறுமை காரணமா பெண் குழந்தைகளே போதுமென்று முடிவுசெய்து குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிவுசெய்தோம். தாளவாடி அரசு மருத்துவமனையில் 2022, பிப்ரவரி 22-ஆம் தேதி அட்மிட்டானேன். 28 ஆம் தேதி 8 பேருக்கு ஆபரேஷன் செய்தாங்க. என்னைத் தவிர 7 பெண்களும் டிஸ்சார்ஜாகி வீட்டுக்குப் போய்ட்டாங்க.

எனக்கு அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டு அபாய கட்டத்துக்குச் சென்றேன். அவசர அவசரமா என்னை ஆம்புலன்ஸ்ல ஏத்தி கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுபோனாங்க. அங்க 25 நாட்கள் ஐ.சி.யூ.வில் இருந்தேன். பிறகுதான் சுயநினைவே வந்தது.

தாளவாடி அரசு மருத்துவமனையில் எனக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த டாக்டர் என்ன செய்தாரோ தெரியலை. இதயத்துக்குச் செல்லும் அயோட்டா என்ற ரத்தப்போக்கு லேயரை (நரம்பை) துண்டித்து விட்டதாகவும் அதனைச் சரி செய்ய முடியாது. உயிருக்கு ஆபத்தானது என்றும் கோயம்புத்தூர் டாக்டர்கள் கூறினார்கள்.

இப்ப என்னால எந்த வேலையும் செய்யமுடியாது. இரண்டு குழந்தைகள் இருக்குது. என்னுடைய தாயார் வீட்டில்தான் இருக்கிறேன். அடிக்கடி வாந்தி, மயக்கம் இப்படி ஏதேதோ பல்வேறு தொந்தரவுகள், உபாதைகள் இருந்துக்கிட்டே இருக்குது. தாளவாடி டாக்டர்கள் தவறான ஆபரேஷன் செய்ததன் விளைவு நான் என் உயிரை காப்பாற்றிக் கொள்ள போராடிக்கொண்டிருக்கிறேன்.

மீண்டும் ஒரு ஆபரேஷன் செய்யவேண்டுமாம், அதற்கு தனியார் மருத்துவமனைகளில் பல லட்சங்கள் செலவாகும் என்கிறார்கள். கூலி வேலை செய்து பிழைக்கும் நாங்கள் பணத்திற்கு எங்கே செல்வோம்? என்னை பழைய நிலைக்கு கொண்டுவருவதற்கான அறுவை சிகிச்சையை அரசாங்கம் செய்யவேண்டும். தவறான அறுவை சிகிச்சை செய்த அந்த மருத்துவரை தண்டிக்க வேண்டும். அரசு மருத்துவமனையை நம்பிச் சென்று குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்தேன். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் கவனத்திற்கு நக்கீரன் மூலமாக கொண்டுசென்று எனக்கு உரிய நீதியும், நிவாரணமும் பெற்றுத் தாருங்கள்” என்றார் பாதிக்கப்பட்ட அனுபல்லவி.

ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் சுங்கராவிடமும் மனு கொடுத்தார். மருத்துவர் குழுவை அழைத்து உடனடியாக என்ன செய்யவேண்டும் என பாருங்கள் என்றார். அந்த மருத்துவர்கள் குழு அறிக்கை தருவதாக கூறிவிட்டுச் சென்றுவிட்டது.

அரசு மருத்துவர்களால் பாதிப்புக்குள்ளான அனுபல்லவிக்கு தாமதமின்றி நீதியும், நிவாரணமும் கிடைக்க தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் உதவுவாரா?