
சிதம்பரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக் குழு கூட்டம், மாவட்டத் தலைவர் இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் மாதவன், பொருளாளர் தட்சிணாமூர்த்தி, உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்தில் உயிர்நீத்த 283 விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பிறகு, விவசாய சங்க விருதாச்சலம் வட்டத் தலைவர் கோவிந்தன் தலைமையில் விவசாயிகள் முதனை கிராமத்தில் இருந்து புறப்பட்டபோது ஊ.மங்களம் காவல்துறையினர் இரண்டு மணிநேரம் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனைத் தமிழ்நாடு விவசாயச் சங்கத்தின் கடலூர் மாவட்டக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
வேரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் இளங்கீரனை காவல் துறை தாக்கியதைக் கண்டித்தும் வழக்குகளைத் திரும்பப் பெறக்கோரியும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் பிப்ரவரி 17 அன்று காட்டுமன்னார்குடியில் நடைபெறும் போராட்டத்தில் அதிகமான விவசாயிகள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.
மேலும், ஜனவரி மாதம் பெய்த மழையால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கிட வேண்டும். புயல் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இன்சூரன்ஸ் தொகை முழுமையாகக் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.