
கடலூர் மாவட்டம், இராமநத்தம் அடுத்துள்ள லெக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரின் தந்தை ஆதிமூலம், உடல்நலக் குறைவால் பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை முடிந்து அவர் ஆட்டோவில் வீடு திரும்பும் போது, தொழுதூர் பேருந்து நிலையத்தில் பெரம்பலூர் மாவட்டம் கீழக்குடிக்காட்டைச் சேர்ந்த வெங்கடேஸ் என்பவரின் மனைவி சத்யப்பிரியா (வயது 26) என்ற உறவுக்காரப் பெண்ணைப் பார்த்துள்ளார்.
சத்யப்பிரியா, தான் பிறந்த ஊரான மங்களூருக்குச் செல்ல வந்ததாகவும், பஸ் இல்லாததால், பேருந்துக்காகக் காத்திருப்பதாகவும் கூறினார். மேலும், கிருஷ்ணமூர்த்தியுடன் ஊருக்கு வருவதாகக் கூறி, அவருடன் ஆட்டோவில் ஏறி லெக்கூர் சென்றுள்ளார். பிறகு, கிருஷ்ணமூர்த்தி தனது வீட்டில் சத்யப்பிரியவை விட்டுவிட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது சத்யப்பிரியா, கிருஷ்ணமூர்த்தியிடம் இரவு இங்கேயே தங்கிக் கொள்வதாகக் கூறியுள்ளார். பிறகு, வீட்டில் இருந்த கிருஷ்ணமூர்த்தியின் மனைவி ராஜாத்தி (வயது 40), கீர்த்திகா (வயது 20), மோனிகா (வயது 18) ஆகிய மூவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாகப் போடுவதாக ஆசை வார்த்தைக் கூறி தான் கொண்டு வந்த மயக்க ஊசியைப் போட்டுள்ளார்.
மேலும், இரவு வீட்டிற்கு வந்த கிருஷ்ணமூர்த்தியிடமும் நைசாகப் பேசி கரோனா தடுப்பூசிப் போடுவதாகக் கூறி மயக்க ஊசியைப் போட்டுள்ளார். இதையடுத்து, அனைவரும் மயக்கம் அடைந்த நிலையில், ராஜாத்தி அவரது மகள்களான கீர்த்திகா, மோனிஷா ஆகியோர் அணிந்திருந்த 30 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளார். அதிகாலையில் எழுந்து பார்த்தபோது வீட்டில் இருந்த நகைகள், கழுத்தில், காதில், கையில் இருந்த நகைகள் எதுவும் இல்லாததால், அதிர்ச்சியடைந்த கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தினர் உறவுக்காரப் பெண் சத்யப்பிரியாவை தேடி அலைந்தனர்.
பின்னர், இராமநத்தம் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, சத்யப்பிரியாவை கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம் கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.