Skip to main content

"தொழிற்சாலைகளில் சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்"- அமைச்சர் எம்.சி.சம்பத்!

Published on 06/05/2020 | Edited on 06/05/2020

 

cuddalore district collector office coronavirus prevention minister mc sampath


கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வெ.அன்புச்செல்வன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் ஆகியோர் முன்னிலையில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் நடைபெற்றது.
 

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் சம்பத் கூறியதாவது: “கடலூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும் மக்கள் அச்சப்படத் தேவையில்லை. பிற மாவட்டங்களிலிருந்து வந்தவர்களைக் கண்டறிய மாவட்ட நிர்வாகம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. சென்னைக்குச் சென்று வந்தவர்கள் மற்றும் பிற மாநிலங்களுக்குப் பணி நிமித்தமாகச் சென்று வந்தவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை மேற்கொள்ளவேண்டும். அவர்களுக்கும் அவர்களைச் சார்ந்த குடும்ப நபர்களுக்கும், தனித்திருந்து நோய்த்தொற்று பரவாமல் மக்களைக் காக்கும் பொறுப்பு உள்ளதை உணர்ந்து சமூக நோக்கில் செயல்பட வேண்டும்.

பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் கண்காணிப்புக் குழுக்கள் கிராம நிர்வாக அலுவலர், சத்துணவு அமைப்பாளர், அங்கன்வாடி பணியாளர், ஊராட்சி செயலர், உள்ளாட்சி அமைப்புகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


மேலும் மாவட்டத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்குச் சத்தான உணவுகள் மற்றும் மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கக் கூடிய சத்தான சரிவிகித உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மேலும் வைட்டமின் சி நிறைந்த பழச்சாறு, கபசுரகுடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.


தொழில் நிறுவனங்கள் இயங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வல்லுநர் குழுவும், தமிழக அரசும் வகுத்துள்ளன. அதன்படி அவைகள் செயல்பட வேண்டும். தொழிற்சாலைகளில் பணியாற்றுவோர் அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். தொழிற்சாலைகளில் சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் பாதியளவு மட்டுமே பயணிக்க வேண்டும். தொழிற்சாலை வாயில்களில் கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும். இவற்றைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்