/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ATM4_0.jpg)
கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகே உள்ள இறையூரில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் இயந்திரம் உள்ளது. இதில் பணம் நிரப்புவதற்காக நேற்று புதுச்சேரியிலிருந்து துப்பாக்கி ஏந்திய காவலர் மற்றும் பணம் நிரப்பும் பணியாளர்களுடன் வாகனம் வந்து பணத்தை நிரம்பிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் பணம் நிரப்பும் பணி முடிவடைந்தவுடன் அந்த வாகனம் புறப்பட்டு பெண்ணாடம் நோக்கி சென்றது.
அப்போது பொன்னேரி மேம்பாலம் அருகே வாகனம் சென்று கொண்டிருந்தபோது, அந்த வாகனத்தின் அடிப் பகுதியின் உள்ளே நான்கு சக்கரங்களுக்கும் இடையே ஒருவர் தொங்கி கொண்டு சென்றதை பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து, வங்கிக்கு தகவல் அளித்துள்ளனர். அதையடுத்து அந்த வங்கியின் மேலாளர் பணம் நிரப்ப வந்த வாகனத்தின் டிரைவர் ராமநாதனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து டிரைவர் மேம்பாலத்தின் மீது வாகனத்தை நிறுத்தி பார்த்த போது, வாகனத்தின் அடியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தொங்கியபடி இருந்துள்ளார். அவரை வங்கி ஊழியர்கள் மற்றும் டிரைவர் வெளியே வருமாறு கேட்டனர். அதற்கு தான் வெளியே வந்தால் தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டல் விடுத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி ஊழியர்கள் பெண்ணாடம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், அங்கு வந்த காவல்துறை உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வாகனத்தின் அடியில் இருந்த அந்த நபரை அழைத்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் மதுபோதையில் முன்னுக்குப்பின் முரணான பதிலை கூறியதாக தெரிகிறது. மேலும் அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் எதற்காக இவ்வாறு செய்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)