Skip to main content

கடலூர் மாவட்டத்தில் மீண்டும் கரோனா! 

Published on 01/05/2020 | Edited on 01/05/2020

 

cuddalore district 3 new positive cases


கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மே- 3 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஊரடங்கை மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்க மத்திய அரசுக்குப் பல்வேறு மாநில முதல்வர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 


கடலூர் மாவட்டத்தில் கடந்த 29- ஆம் தேதி வரை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக இருந்த நிலையில், அவர்களின் 20 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து ஏப்ரல் 29- ஆம் தேதி அன்று வீடு திரும்பினர். மற்ற 6 பேர் மட்டும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதனிடையே கடலூர்  ரங்கநாதன் தெருவைச் சேர்ந்த  69 வயது முதியவர் புட்டபர்த்தி சாய்பாபா கோவிலுக்குச் சேவை செய்வதற்காகக் கடந்த மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் சென்றிருந்தார். அதன் பிறகு கடந்த ஏப்ரல் 25- ஆம் தேதி கடலூர் திரும்பிய நிலையில், அவருக்கு  26- ஆம் தேதி கரோனா மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா தொற்று இருப்பது உறுதியானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

அதேசமயம் சிகிச்சையில் இருந்த 6 பேரும் நேற்று (30-04-2020) குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினர். இதனால் கடலூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்து. இதனால் கரோனா இல்லாத மாவட்டமாக கடலூர் மாவட்டம் அறிவிக்கப்படவிருந்தது. இந்த  நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் பணியாற்றிய வேப்பூர் அடுத்த படுகளாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு சென்னையிலேயே கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் பரிசோதனை முடிவுகள் வருவதற்குள் சொந்த ஊருக்குத் தப்பித்து வந்துள்ளனர். 

 

 


ஆனால் அவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனை முடிவில் தெரிய வந்ததால், அவர்கள் இருவரையும் அதிகாரிகள் கண்டுபிடித்து சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அதேபோல் சென்னை கோயம்பேட்டிலிருந்து விளாங்காட்டூர், படுகளாநத்தத்தைச் சேர்ந்த 45 தொழிலாளர்கள் லாரிகள் மூலமாக ஊர்களுக்கு வந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த தகவலின் அடிப்படையில் வட்டாட்சியர் கவியரசு மற்றும் மருத்துவக் குழுவினர் அக்கிராமங்களுக்குச் சென்று, அத்தொழிலாளர்களைக் கண்டறிந்தனர். பின்னர் அவர்கள் 45 பேரும் வேறு பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர். அதோடு 45 பேரின் உமிழ் நீர் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், “கடலூர் மாவட்டத்தில் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியதால், கடலூர் மாவட்டம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்தது. படிப்படியாக 26 பேரும் குணமடைந்து அவரவர் வீடுகளுக்குத் திரும்பிய நிலையில் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக அறிவிக்கும் சமயத்தில் புட்டபர்த்திக்குச் சென்று வந்தவரால் கரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் ஏற்பட்டுள்ளது. 
 

http://onelink.to/nknapp



இதன் பிறகு தொற்று இல்லாத மாவட்டமாக அறிவிக்க 28 நாட்கள் காத்திருக்க வேண்டும். கடந்த ஒன்றரை மாதமாக உழைத்த காவல்துறை, சுகாதாரப் பணியாளர்கள், வருவாய்த்துறையினர் அனைவரது உழைப்பும் வீணாகியுள்ளது. எனவே இனியும் தொற்று ஏற்படாமல் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். வெளி நாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் உடனடியாகத் தகவல் தெரிவித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தகவல் தெரிவிக்காமல் தங்கியிருப்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கவலையுடன் எச்சரித்தார்.

கடந்த 10 நாட்களாக தொற்று ஏதும் இல்லாமலும், தொற்றுக்கு ஆளானவர்கள் குணமடைந்தும் வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் மட்டுமல்ல கடலூர் மாவட்ட மக்களும் நிம்மதியடைந்து வந்த சூழலில், புதிதாக மூன்று பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதால் மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 


 

 

சார்ந்த செய்திகள்