Advertisment

அனுமதியின்றி ஆழ்துழாய் கிணறுகள் அமைத்தால் கடும் நடவடிக்கை - கடலூர் மாவட்ட ஆட்சியர் 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித் 4 நாட்களுக்கு இறந்த நிலையில் மீட்கப்பட்டான். இதனிடையே கடலூர் மாவட்டத்தில் பயன்பாடில்லாமல் முறையாக மூடப்படாமலிருக்கும் ஆழ்துளை கிணறு, ஆழ்குழாய் கிணறு மற்றும் திறந்த வெளி கிணறுகளை உடனடியாக முறையாக மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

Advertisment

cuddalore collector warns

இந்நிலையில் புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் தோண்டுவதற்கும் எச்சரிக்கைகளை விடுத்துள்ளார் அன்புச்செல்வன். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

"கடலூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் ஆழ்துளை கிணறு, ஆழ்குழாய் கிணறு மற்றும் திறந்த வெளி கிணறுகள் தோண்டுபவர்கள் சம்மந்தப்பட்ட ஊராட்சியின் தனி அலுவலரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. மேலும் ரிக் இயந்திரம் வைத்திருப்பவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் பதிவுச்சான்று பெற வேண்டும் என்றும் விதிமுறைகள் ஏற்கனவே உள்ளது. தற்போது பழுதடைந்த ஆழ்துளை கிணறு, ஆழ்குழாய் கிணறு மற்றும் திறந்த வெளி கிணறுகளை கண்டறிந்து அவற்றை முறையாக மூடப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

Advertisment

மேற்படி தனி அலுவலர்கள், ஒன்றிய பணி பார்வையாளர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர் பழுதடைந்த ஆழ்துளை கிணறு, ஆழ்குழாய் கிணறு மற்றும் திறந்த வெளி கிணறுகளை ஆய்வு செய்து அவற்றை பட்டியலிட்டு அவை முறையாக மூடப்பட்டு அல்லது மழைநீர் சேமிப்புக்காக பயன்படும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும்.

கடலூர் மாவட்டத்தில் இதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற உள்ளது. கிராமப்புறங்களில் மூடப்படாமல் உள்ள அனைத்து ஆழ்துளை கிணறு, ஆழ்குழாய் கிணறு மற்றும் திறந்த வெளி கிணறுகளையும் உடன் மூடப்பட்டு குழந்தைகள் தவறி விழுவதை முற்றிலுமாக தவிர்க்க இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம் உரிய அனுமதியின்றி அல்லது விதிமுறைகளை மீறி ஆழ்துளை கிணறு, ஆழ்குழாய் கிணறு மற்றும் திறந்த வெளி கிணறுகள் அமைக்கும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் விதிமுறைகளை மீறி செயல்படும் ரிக் உரிமையாளர்களின் பதிவுச்சான்று மாவட்ட கலெக்டரால் ரத்து செய்யப்படும். அத்துடன் அவர்கள் மீது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன்படி சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள அரசு நிலங்கள் அல்லது தனியார் நிலங்களில் மூடப்படாத ஆழ் குழாய் கிணறுகளை கண்டறிந்தால் உடனடியாக 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்". இவ்வாறு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Cuddalore sujith
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe