பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு கடலூர் ஆட்சியர் அழைப்பு!

Cuddalore Collector Invites Farmers to Join Crop Insurance Program

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர கடலூர் மாவட்ட ஆட்சியர்அன்புசெல்வன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

“புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம், விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டில் கார், குறுவை, சொர்ணவாரி நெற்பயிர் மற்றும் இதர காரீப்பருவ பயிர்களை பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை கடலூர் மாவட்டத்தில் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்துகிறது. இதன்படி நடப்பாண்டில் கடலூர் மாவட்டத்தில் 517 வருவாய் கிராமங்களில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்படுவர். கடன் பெறா விவசாயிகள் பொது சேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ பதிவு செய்து சேர்ந்து கொள்ளலாம்.

இதன்படி கார், குறுவை, சொர்ணவாரி பருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் இந்த திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் அடுத்த மாதம் (ஜூலை) 31-ஆம் தேதி ஆகும். இதர காரீப் பருவ பயிர்களான உளுந்து, மணிலா கிராம அளவிலும், கம்பு, எள் பயிர்கள் பிர்கா அளவிலும் இந்த திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் ஆகஸ்டு 16-ஆம் தேதி ஆகும்.

ஆகவே விவசாயிகள் இறுதி நேர நெரிசலை தவிர்க்கவும், விவசாயிகளின் விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டத்தில் காப்பீட்டுத்தொகை செலுத்தி தங்களது பயிர்களை முன்கூட்டியே பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

nakkheeran app

பயிர் காப்பீட்டுத் தொகையில் விவசாயிகள் 2 சதவீதம் மட்டும் அதாவது நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.626, உளுந்துக்கு ரூ.331, மணிலாவுக்கு ரூ.525, கம்புக்கு ரூ.122, எள் ரூ.156 என குறிப்பிட்ட தொகையை மட்டும்காப்பீட்டு கட்டணமாக செலுத்தினால் போதுமானது. விவசாயிகள் முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், சிட்டா மற்றும் அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டண தொகையை செலுத்திய பிறகு, அதற்கான ரசீதையும் பொதுசேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த திட்டம் தொடர்பாக விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களை அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள அலுவலர்களை அணுகி தெரிந்து கொள்ளலாம்” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Cuddalore district District Collector Farmers
இதையும் படியுங்கள்
Subscribe