
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள விசூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் - பாக்கியலட்சுமி தம்பதியினருக்கு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நேற்றைய தினம் (12.0.2021) பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை நேற்று (13.02.2021) மதியம் மருத்துவமனையில் இருந்து காணாமல் போனது. இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலையடுத்து மருத்துவமனைக்கு சென்ற போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது பெண் ஒருவர் அந்த குழந்தையை எடுத்து செல்வது பதிவாகி இருந்ததையடுத்து அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பேருந்து ஓட்டுனர்களிடம் விசாரணை நடத்தியதில் அந்த பெண், குழந்தையுடன் புதுச்சேரி பேருந்தில் ஏறி சென்றது உறுதிபடுத்தப்பட்டது. அதையடுத்து புதுச்சேரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் புதுச்சேரி பேருந்து நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்பு கடலூர் போலீசார் புதுச்சேரி போலீஸார் உதவியுடன் குழந்தையை கடத்திய பெண் புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் அந்த பெண்னை, கடத்தப்பட்ட குழந்தையுடன் கையும் களவுமாக பிடித்து, குழந்தையை மீட்டனர். மேலும் முதற்கட்ட விசாரணையில் குழந்தையை கடத்தியது புதுச்சேரி பன்னித்திட்டு பகுதியை சேர்ந்த லாவண்யா என்பது தெரிந்தது. அவர் எதற்காக கடத்தினார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூரில் திருடப்பட்ட குழந்தையை மூன்றே மணி நேரத்தில் இருமாநில போலீசாரும் சேர்ந்து மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.